ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள திரைப்படம் போலா சங்கர்.
தமிழில் அஜித் நடித்திருந்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகியுள்ளது போலா சங்கர்.
சிரஞ்சீவியுடன் தமன்னா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
போலா சங்கர் டீசருடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.
வெளியானது போலா சங்கர் டீசர்: தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது போலா சங்கர் படத்தில் நடித்துள்ளார். மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். சிரஞ்சீவியின் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
ஆரம்பம் முதலே அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டீசர், சிரஞ்சீவி ரசிகர்களுக்கு செம்மையான ட்ரீட்டாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார் சிரஞ்சீவி. இடையிடையே சில பஞ்ச் வசனங்கள் பேச ஃபயர் மோடில் வீவ்ஸ் கவுண்ட்டிங் எகிறி வருகிறது. டீசரின் இறுதியில் போலா சங்கர் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, போலா சங்கர் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளிலேயே சிரஞ்சீவியின் போலா சங்கரும் ரிலீஸாகிறது. இந்தப் படம் அஜித்தின் வேதாளம் தெலுங்கு வெர்ஷன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2015ல் வெளியான வேதாளம் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.
அஜித்துடன் ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன், சூரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அண்ணன் தங்கை பாசத்தை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்திற்கு அஜித் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதே வேதாளம் கதையை போலா சங்கர் படமாக ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் மெஹர் ரமேஷ். இதில் சிரஞ்சீவி ஜோடியாக தமன்னாவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர்.

போலா சங்கர் டீசரை பார்க்கும் போது வேதாளம் அஜித்துக்கே டஃப் கொடுத்துள்ளார் சிரஞ்சீவி. அதேபோல், படமும் ஹிட்டாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணுக்கு குழந்தை பிறந்தது. சிரஞ்சீவியின் குடும்பத்துக்கு வாரிசு வந்த நேரம் போலா சங்கர் படமும் வெளியாகவுள்ளது. இதனால் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உற்சாகமாக காணப்படுகிறார்.