சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வரும் 29ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியது கடும் சர்ச்சையானது.
இதனையடுத்து மாமன்னன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் அனைத்திலும் இந்த சர்ச்சை குறித்து கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், கமல்ஹாசன் மீதான விமர்சனம் குறித்து முதன்முறையாக விளக்கம் கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.
கமலிடம் இருந்து ‘அந்த’ வார்த்தைக்காக தான் காத்திருந்தேன்: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் வரிசையில் மாமன்னனும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியின் கடைசி படம், வித்தியாசமான கெட்டப்பில் கம்பேக் கொடுக்கவிருக்கும் வடிவேலு, ஃபஹத் பாசில், ஏஆர் ரஹ்மான் இசை என மாமன்னன் படம் ரொம்பவே ஹைப் கொடுத்துள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 1ம் நடைபெற்றது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் பா ரஞ்சித், வெற்றிமாறன், எஸ்ஜே சூர்யா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். இதனிடையே, மாமன்னன் மேடையில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது. அவரின் கருத்துகள் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் மாரி செல்வராஜுக்கு எதிராகவும் பலர் கருத்து தெரிவித்தனர். இன்னொரு பக்கம் மாரி செல்வராஜின் கருத்தில் நியாயம் இருப்பதாகவும் ஏராளமான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில், மாமன்னன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மாரி செல்வராஜ், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், உதயநிதி நால்வரும் தொடர்ச்சியாக பங்கேற்று வருகின்றனர்.
அந்நிகழ்ச்சிகளில் தேவர் மகன் படம் மீதான விமர்சனம் குறித்தும் கமல்ஹாசன் பற்றியும் கேட்கப்படுகிறது. இதனால், மாரி செல்வராஜ் அவரது மனம் திறந்து உண்மையை பேசியுள்ளார். அதில், “தான் பேசியது childish ஆக தான் இருந்தது. சினிமாவை ரொம்ப பிடிச்ச, சினிமாவை பற்றி முழு அறிவுள்ள ஒருவரிடம் தான் எனது கேள்விகளை கேட்டேன். அது childish ஆக இருந்தாலும் என்னுடைய கேள்விகள் தான்” என்றுள்ளார்.
மேலும், மாமன்னன் படத்தை கமல்ஹாசனுக்கு தனியாக திரையிட்டுக் காட்டியதாகவும், அதனைப் பார்த்துவிட்டு அவர் சொன்ன வார்த்தை தான் தற்போது தனக்கான பதில் என்றும் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். அதாவது “மாமன்னன் திரைப்படம் மாரி செல்வராஜ்ஜின் அரசியல் கிடையாது, இது என்னோட அரசியலும் கூட. சுருக்கமாக சொன்னால் இதுதான் நமது அரசியல்” என்றார். கமல்ஹாசனிடம் இருந்து இந்த வார்த்தை வரவேண்டும் தான் எனது விருப்பமும் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
மேலும், மாமன்னன் திரைப்படத்தை முழுமையாக பார்த்த கமல்ஹாசன், படம் நன்றாக வந்துள்ளது எனக் கூறி தன்னை ஆசிர்வதித்துச் சென்றார் எனவும் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மாமன்னன் மாரி செல்வராஜ் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வந்தாலும், இந்த விஷயத்தில் அவருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.