சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.
தொடர்ந்து திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியிருந்தார்.
இதனையடுத்து தேவர் மகன் படம் குறித்து டிவிட் செய்துள்ள மோகன் ஜி-யை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தேவர் மகன் படத்துக்கு முட்டுக் கொடுத்த மோகன் ஜி:பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்களை இயக்கி பிரபலமானவர் மோகன் ஜி. இவரது 4 படங்களுமே நெகட்டிவான விமர்சனங்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. சாதிய அதிகாரத்துக்கு ஆதரவாகவும் பிற்போக்குத்தனமாகவும் படம் இயக்குவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது தேவர் மகன் படத்துக்கு ஆதரவாக ட்விட் போட்டு மீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார் மோகன் ஜி. சமீபத்தில் நடைபெற்ற மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியிருந்தார். அவரின் கருத்துகள் சர்ச்சையானதால் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து மிகப் பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது.
சிலர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும், இன்னும் பலர் மாரி செல்வராஜ் கருத்து சரியானது என்றும் விவாதித்து வருகின்றனர். அதேநேரம் தேவர் மகன் படம் குறித்தும், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல் முன்னிலையில் விமர்சித்தது பற்றியும் மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்து வருகிறார். இந்தப் பிரச்சினையை பின்னணியாக வைத்தே தேவர் மகன் படத்துக்கு பாராட்டு பாத்திரம் வாசித்துள்ளார் மோகன் ஜி.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள மோகன் ஜி, “தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்த திரைப்படத்தின் தனித்தன்மை. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம் தேவர் மகன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோகன் ஜியின் இந்த டிவிட்டர் பதிவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இவ்வளவும் பேசும் உன்னால் காலத்தால் அழியாத மாதிரி ஒரு படம் இயக்க முடியாது” என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், மாரி செல்வராஜுக்கு சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் உன்னைப் போன்ற ஒருவருக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
மேலும், “ஆதிக்கமே முழுமனநிலையாக கொண்ட தங்களை போன்ற படைப்பாளிகள் என்றுமே படைப்பின் உண்மையான ஆழ்த்தை அடைய இயலாது. வலியை உணராதவனின் தசைகள் என்றுமே கிளர்ச்சியடைந்ததில்லை. முதலில் ஆக்கப்பூர்வமான படைப்பை கொடுங்கள்! பின் இதுபோன்ற தெளிவான கருத்து மோதலுக்குள் வரலாம்” என பதிலடி கொடுத்துள்ளனர். அதேபோல், இதுதான் நேரம் என மாரி செல்வராஜ் மீது வன்மத்தை கொட்ட வேண்டாம் எனவும் அவர்கள் மோகன் ஜி-ஐ விமர்சித்து வருகின்றனர்.