ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் கற்கள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை- பெங்களூர் மார்க்கத்தில் ரயில் கவிழ்ப்பு சதிக்காக கற்கள் வைக்கப்பட்டனவா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆம்பூர் வீரவர் கோவில் அருகே சென்னை- பெங்களூர் ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தில் கற்கள் நிறைய வைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த ரயில்வே பணியாளர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து கற்கள் தண்டவாளத்தில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டன.
ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்ம நபர்கள் யார் என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சென்னை- பெங்களூர் மார்க்கத்தில் செல்லும் ரயில்களை கவிழ்க்கும் சதி நோக்கத்துடன் இந்த கற்கள் வைக்கப்பட்டனவா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கற்கள் உரிய நேரத்தில் அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக கூறப்படுதாவது: மைசூரில் இருந்து சென்னை நோக்கி காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை ஆம்பூர் வீரவர் கோவில் பகுதியை கடந்தது. அப்போது ரயில் கற்கள் மீது பயங்கரமாக மோதிய சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் காவிரி எக்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டு ரயிலில் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக சென்னை புறப்பட்டது. இதன்பின்னரே ரயில்வே தண்டவாளங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதில் பெருங்கற்கள் வைத்திருப்பது தெரியவந்தது. சென்னை நோக்கி வந்த காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்கும் சதித்திட்டத்துடன் இக்கற்கள் வைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சென்னையில் இருந்து உடனடியாக மோப்ப நாய்கள், உதவியுடன் ரயில்வே அதிகாரிகள் ஆம்பூர் சென்றனர். வீரவர் கோவில் பகுதியில் கற்கள் வைக்கப்பட்ட இடத்தில் மோப்பநாய் உதவியுடனும் சோதனைகள், தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஜான்சி என்ற மோப்பநாய் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.