இஸ்லாமியர்கள் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருடைய நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பின்னர் பைடன் உடன் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றர், அப்போது, அவரிடம் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு மோடி பதிலளிக்கும்போது, “சாதி, மதம், பாலினம் ஆகிய பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை” என்றார்.

இதையடுத்து செய்தி நிறுவனம் ஒன்றின் நேர்காணலில் பங்கேற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்தது..

“இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், அவரிடம் ஒருவேளை நீங்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியாவில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளது என்று கூறுவேன். அதுவே எனது உரையாடலின் பகுதியாக இருக்கும்.

இல்லாவிட்டால், அதிபர் பைடனாவது பிரதமர் மோடியை சந்திக்கும்போது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது குறித்து பேச வேண்டும் . ஆனால், உண்மையாகவே நமது நட்பு நாடுகளுடன் மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவது கடினமானதுதான்” என்றார்.

நிர்மலா சீதாராமன் பதிலடி: “அமெரிக்காவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி, தனது தலைமையிலான அரசு எந்த சமூகத்தையும் பாரபட்சம் பார்க்காமல், நாட்டில் உள்ள அனைவரது வளர்ச்சிக்காகவும் இயங்கி வருவதாக தெரிவித்தார். ஆனால், இல்லாத பிரச்சினைகளை சிலர் முன்னிலைப் படுத்தி வருகின்றனர்.

நாட்டின் பிரதமராக அவருக்கு வழங்கப்பட்ட 13 விருதுகளில், 6 விருதுகள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளால் வழங்கப்பட்டவை. ஆனால், பாஜகவுக்கு எதிராக தெளிவாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் இது.

பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முன்னாள் அமெரிக்க அதிபர் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். அது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இது இரு நாடுகள் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் மிகவும் நிதானத்துடன் சொல்கிறேன். ஆனால் அங்கேயும் இந்தியாவில் மத சுதந்திரம் குறித்த கருத்துகள் எழுகின்றன. முன்னாள் அதிபரான அவரது ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாடுகளில் சுமார் 26,000 குண்டுகள் வீசப்பட்டன. அப்படி இருக்கும் சூழலில் அவர் வைக்கும் குற்றச்சாட்டை மக்கள் நம்புவார்களா?

பிரதமர் மோடி அரசின் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை வெல்ல முடியாதவர்கள் இதை கையில் எடுத்துள்ளதாக நினைக்கிறேன்” என அமைச்சர் நிர்மலா சீதாரமான் பேசியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.