கேரளாவில் யூ-டியூப் சேனல் நடத்தி அதிக வருமானம் ஈட்டியவர்கள் அதற்கு உரிய வரியை செலுத்தவில்லை என வருமானவரித்துறை கவனத்துக்குச் சென்றுள்ளது. இதையடுத்து கேரளாவில் யூ-டியூபர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் கடந்த சில நாள்களாக அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நடிகையும், தொகுப்பாளினியுமான பேளிமாணி, ஷெபின், அர்ஜ்யூ, கால்மீ ஷஸ்ஸாம், ஜெயராஜ் ஜி நாத், அகில் என்.ஆர்.டி, எம்4 டெக், அன்பாக்ஸிங் நியூஸ், ரைஸிங் ஸ்டார், ஈகிள் கேமிங், காஸ்ட்ரோ கேமிங் உள்ளிட்ட யூ டியூப் சேனல் நடத்துபவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ஒரே சமயத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் யூ-டியூபர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் பல யூ-டியூபர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை வருவாய் வருவதாகவும், ஆனால் அவர்கள் முறையாக வரி செலுத்துவது இல்லை எனவும் இதனை ஆவணங்கள் அடிப்படையில் வருமானவரித்துறை காண்டுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

யூ-டியூப்பர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது யூ-டியூப்பர்களின் சொத்துக்கள், டெப்பாசிட்டுகள் உள்ளிட்டவைகள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை வட்டாரங்களில் கூறப்படுகின்றன. கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையால் யூ-டியூப் சேனல் நடத்துபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.