சேலம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காபட்டி பகுதிகளில் அ.தி.மு.க கொடியை கழக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு ஏற்றி வைத்தார். பின்னர், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “இந்தியாவில் அதிக தார்சாலை கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். எங்களது ஆட்சியில் கிராமத்தில் பஸ் போக்குவரத்து சாலைகளை தார் சாலைகளாக மாற்றினோம். கிராம், நகரம் என அனைத்து பகுதிகளும் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியை தான் சாதனையாக பார்க்கிறோம். ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடப்பதை கூட பொறுத்து கொள்ள முடியாத முதல்வர் தான் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதுவரை எந்த முயற்சியும் எடுக்காத அரசாங்கம் தான் தி.மு.க.

தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்துவார்களாம். இதனால் கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றனர். 2 ஆண்டு கால ஆட்சியில், எதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்து மக்கள் நன்மை பெற்றார்களா என்றால் கிடையாது. அ.தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை தான் திறந்து வைக்கிறார். பேனா நினைவு சின்னம் வைக்க எதிர்க்கவில்லை. ஆனால், எழுதாத பேனாவை கடலில் வைக்க தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
கூரை ஏறி கோழி பிடிக்கதாவன், வானம் ஏறி வைகுண்டம் போனான். அதுபோல், தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து நாட்டின் பிரதமரை உருவாக்கிறாராம். 2021ம் ஆண்டு தேர்தலில் 525 அறிவிப்புகளை அறிவித்தார். பின்னர், எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் விலைவாசி 50 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், வருமானம் தான் இல்லை. ஒன்றை கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி தான் அதிமுக. மிகப்பெரிய கட்சிக்கு, நம்முடைய சட்டமன்ற தொகுதியில் இருந்து பொதுச்செயலாராக வந்தது பெருமை. வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடி தாருங்கள். தமிழகம் மிகச்சிறந்த மாநிலமாக உங்கள் நல்லாதரவு தர வேண்டும்.

அ.தி.மு.க மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. அ.தி.மு.க ஆட்சியில் அறிவித்த மற்றும் அறிவிக்கப்படாத ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க அறிவித்த அறிவித்த திட்டங்களில் பல நிறைவேற்றவில்லை. இது ஜனநாயக நாடு, இது சர்வதிகார ஆட்சி கிடையாது. ஒவ்வொரு மனிதனுக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. தி.மு.க-வில் வாரிசுகளுக்கே பதவி கொடுக்கப்படுகிறது. அ.தி.மு.க-வில் சாதரண தொண்டன் கூட தலைமை பதவிக்கு வரலாம். செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைது செய்யப்பட்டவர். அவர் அமைச்சராக இருக்கலாமா? இதற்கு முன்பு, அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சி காலத்தில் கைதான அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.