சென்னை: Adipurush (ஆதிபுருஷ்) ஆதிபுருஷ் படத்தை பார்த்த பிறகுதான் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது புரிகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்திருக்கிறார்.
ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளியானது ஆதிபுருஷ் படம். பாகுபலி புகழ் பிரபாஸ், பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான்,கீர்த்தி சனோனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோனி சீதையாகவும் நடிக்க மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் படம் வெளியானது.
நெகட்டிவ் விமர்சனம்: ராமாயணத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்ட படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு சென்றன. ஆனால் படம் அவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. கிராஃபிக்ஸ் காட்சிகளோ கார்ட்டூன் காட்சிகள் போல் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்தனர். ஓரிரு இடங்களில் பின்னணி இசை மட்டுமே ஆறுதல் அளிக்கிறது என்றும் பிரபாஸ் பார்ப்பதற்கு ராமர் போல இயேசுநாதர் போல இருக்கிறார் என கூறி மீம்ஸ்களையும் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூலிலும் டல்: படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக படத்தின் வசூல் மொத்தமாக படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் ஏழு நாட்கள் முடிவில் மொத்தமாக 410 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக ஆதிபுருஷ் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர். ஒருபக்கம் நெகட்டிவ் விமர்சனம், வசூலில் டல் என ஆதிபுருஷ் அடிவாங்கிக்கொண்டிருக்க மறுபக்கம் படத்துக்கு எதிர்ப்பும் வலுத்துவருகிறது.

வலுக்கும் எதிர்ப்பு: சீதை தொடர்பான வசனம், அனுமன் ராவணன் பற்றி பேசும் வசனம் போன்றவைகளுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் திரைப்பட தொழிலாளர் சங்கமோ படத்தை தடை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் சமீபத்தில் எழுதியது. நேபாளத்திலோ படத்துக்கு தடையும் விதிக்கப்பட்டுவிட்டது. ஆதிபுருஷ் படத்துக்கு மட்டுமின்றி அனைத்து இந்தி படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆதிபுருஷ் டீமை 50 டிகிரி செல்சியஸில் எரிக்க வேண்டும் என சக்திமான் நாடகத்தில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்திருந்தார்.
பங்கம் செய்த சேவாக்: இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தை பங்கமாக கலாய்த்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக். படம் குறித்து அவர் தனது ட்விட்டர் பகக்த்தில், “ஆதிபுருஷ் படத்தை பார்த்த பிறகுதான் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது புரிகிறது.” என பதிவிட்டிருக்கிறார். பாகுபலி படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வி படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தபோது பலராலும் கேட்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.