கிஷன்கஞ்ச் : பீஹாரில் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ககாரியா மாவட்டத்தில், கங்கை நதி குறுக்கே, மாநில அரசு கட்டி வந்த பாலம், மூன்று வாரங்களுக்கு முன், இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது.
இந்நிலையில், இது போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. கிஷன்கஞ்ச் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில், கிஷன்கஞ்ச் – கதிஹார் பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் நேற்று இடிந்து விழுந்தது.
எனினும், இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து, ஐந்து பேர் அடங்கிய குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீஹார் துணை முதல்வரும், சாலை கட்டுமானத் துறை அமைச்சருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:
கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் இடிந்து விழுந்த பாலத்தை நாங்கள் கட்டவில்லை. மத்திய அரசின் திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டி வந்தது. இதற்கும், பீஹார் அரசுக்கும் சம்பந்தமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement