சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து கமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகர் பிரபாசின் பிராஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பதை தற்போது படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிராஜெக்ட் கே படத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த வயதிலும் நடிப்பு, தயாரிப்பு மற்றும் அரசியல் என கலந்துக்கட்டி அடித்து வருகிறார். இளம் நடிகர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக அமைந்துள்ளார். நடிப்பில் உலகநாயகன் என்று பாராட்டிற்கு உள்ளாகியுள்ள கமல்ஹாசன், நடிப்பு மட்டுமில்லாமல், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் அவருக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. அரசியலில் ஈடுபட்ட காரணத்தினால் சில காலங்கள், நடிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்த கமல்ஹாசன், தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட் காரணமாக அவர் மிகுந்த உற்சாகத்துடன் பல பிராஜக்ட்களை கையிலெடுத்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக முடங்கியிருந்த இந்தியன் 2 படம் தூசித்தட்டப்பட்டு, கடந்த ஆண்டில் இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கிவரும் நிலையில், இந்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள கமல்ஹாசன், அதை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்தில் இணையவுள்ளார். இந்த இரு படங்களும் கமல் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளன. இந்தியன் 2 படமும் சிறப்பான வரவேற்பை ரிலீசுக்கு முன்பே ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது கமலின் சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும்வகையில் அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள பிராஜெக்ட் கே படத்தில் தற்போது இணைந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே இந்த தகவல் பரவிவந்த நிலையில், தற்போது இந்தத் தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரபாசிற்கு வில்லனாக நடிகர் கமல் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. உலகளவில் சிறப்பான ஒரு நடிகர் இந்த கேரக்டருக்கு தேவைப்பட்டதாக கமல்ஹாசனை குறிப்பிட்டு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
https://twitter.com/CinemaWithAB/status/1672855735313797121
இந்தப் படத்தில் பிரபாசின் வில்லனாக நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவருக்கு 150 கோடி ரூபாய் இந்தப் படத்தில் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்காக தான் மிகுந்த ஆர்வமுடன் காத்திருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் படம் சர்வதேச அளவில் கைத்தட்டல்களை பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தப் படத்திற்கான முதல் கைத்தட்டல் தன்னுடையதாக இருக்கட்டும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். தன்னை ரசிகர்கள் எந்த இடத்தில் வைத்திருந்தாலும், சினிமா மீதான தன்னுடைய காதல் என்றுமே குறையாது என்றும் இந்த குணம் தன்னை சினிமாவில் புதிய முயற்சிகளில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தும் என்றும் கமல்ஹாசன் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிராஜெக்ட் கே படம் பொங்கலையொட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே வாரத்தில் கமலின் இந்தியன் 2 படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.