கெய்ரோ : அமெரிக்க பயணத்தை நிறைவு செய்த பின், இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று எகிப்து நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மூன்று நாள் அரசு முறை பயணமாக கடந்த 20ம் தேதி அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதன்பின், மூன்று நாள் பயணத்தை நிறைவு செய்த மோடி, தென்மேற்கு ஆசிய நாடான எகிப்துக்கு நேற்று சென்றார்.
கெய்ரோ விமான நிலையத்தில், அந்நாட்டு பிரதமர் முஷ்தபா மட்பூலி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.
பிரதமர் மோடிக்கு, எகிப்து நாட்டு சம்பிரதாய முறையில் வரவேற்பும், மரியாதையும் அளிக்கப்பட்டது.
எகிப்து அதிபர் அப்தெல் பதா எல் சிசியை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது, இரு நாட்டு உறவு உட்பட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.
பிரதமர் மட்பூலி தலைமையில் எகிப்து அமைச்சரவையின் இந்திய பிரிவினருடனான வட்டமேசை விவாதத்தில் கலந்து கொள்ளும் மோடி, அந்நாட்டு முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பின், தாவூதி போஹ்ரா சமூகத்தினரின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்ட, 11ம் நுாற்றாண்டின் வரலாற்று சிறப்பு மிகுந்த அல்- ஹக்கிம் மசூதிக்கு மோடி செல்ல உள்ளார்.
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, முதல் உலகப் போரில் எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் பணியாற்றி உயிரிழந்த இந்திய ராணுவத்தைச் சேர்ந்த, 3,799 வீரர்களின் நினைவிடமான கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறையை பிரதமர் பார்வையிடுகிறார்.
இந்திய பிரதமர் ஒருவர், அரசு முறை பயணமாக எகிப்து செல்வது, கடந்த 26 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்