சென்னை: Super Singer 9 (சூப்பர் சிங்கர் 9) விஜய் டிவியில் நடந்துவந்த சூப்பர் சிங்கர் 9ஆவது சீசனில் அருணா என்பவர் டைட்டிலை வென்றார்.
விஜய் டிவியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் பலரது விருப்பத்துக்குரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியும் நடத்தப்படுவது உண்டு. இதுவரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எட்டு சீசன்கள் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து 9ஆவது சீசன் கடந்த சில வாரங்களாக மும்முரமாக நடந்துவந்தது.
இறுதிப்போட்டி: விறுவிறுப்பாக நடந்த சூப்பர் சிங்கரில் இறுதிப்போட்டிக்கு அருணா, அபிஜித், பூஜா, பிரியா, பிரசன்னா ஆகிய ஐந்து பேர் சென்றனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக இன்று இறுதிப்போட்டி நடந்தது. இதில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்ல்துகொண்டார்.இறுதிப்போட்டி பல சுற்றுக்களாக நடைபெற்றது.
பல சுற்றுக்கள்: சூப்பர் சிங்கரில் வென்றால் திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பு எளிதாக கிடைக்கும் சூழல் உருவாகியிருப்பதால் இறுதிப்போட்டிக்கு தேர்வான அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகிய ஐந்து பேரும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி பாடினர். இதனால் ஒவ்வொரு சுற்றிலும் அனல் பறந்தது. அவர்களது ஃபெர்பார்மன்ஸை பார்த்த பலரும் ஐந்து பேரும் இப்படி பாடினால் யாரை வெற்றியாளராக தேர்வு செய்வது என்று குழம்பித்தான் போனார்கள்.
டைட்டில் வென்ற அருணா: இந்தச் சூழலில் இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்தே கலக்கி வந்த அருணாவின் ஃபெர்பார்மன்ஸ் மற்றவர்களைவிட ஒரு படி மேலே இருந்தது. இதன் காரணமாக அவர் சூப்பர் சிங்கர் 9ஆவது சீசனின் டைட்டில் வின்னர் ஆனார். ரசிகர்களின் வாக்குகள், நடுவர்களின் மதிப்பெண்களை வைத்து அவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை ஹாரிஸ் ஜெயராஜ் பரிசளித்தார். இந்த டைட்டிலை வென்றதன் காரணமாக இப்போது புகழின் உச்சியில் இருக்கிறார் அருணா.

முதல் பெண்: இதுவரை நடந்த சூப்பர் சிங்கரின் 8 சீசன்களிலும் ஆண்கள் மட்டுமே டைட்டிலை தட்டி சென்றிருக்கின்றனர். ஒன்பதாவது சீசனில் டைட்டிலை வென்றதன் மூலம் சூப்பர் சிங்கர் டைட்டிலை வெல்லும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார் அருணா. இவர் மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த டைட்டில் வென்றதற்கு பிறகு அருணாவுக்கு திரைத்துறையில் பாடல்கள் பாட வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருணா வின்னரானதை அடுத்து முதல் ரன்னர் அப்பா ப்ரியா ஜெர்சன், இரண்டாவது ரன்னர் அப்பாக பிரசன்னா ஆதிசேஷன், மூன்றாவது ரன்னர் அப்பாக பூஜா வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.