சென்னை: சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
சமூக நீதி காவலர், பிற்படுத்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு மரியாதை செய்யும் விதமாக, சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்.20-ம் தேதி அறிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வராகவும், மத்தியில் வர்த்தகம், வெளியுறவு, நிதி, பாதுகாப்பு என முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தவர் வி.பி.சிங். பின்னர், தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார். அவர் பிரதமராக இருந்தது 11 மாதங்கள்தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை.
சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினார். தமிழகத்தை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக கருதிய அவர், பெரியாரை தனது தலைவராக ஏற்றார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை தனது சொந்த சகோதரர் போல மதித்தவர்.
பேராசிரியர்கள் வேண்டுகோள்: அத்தகைய சமூக நீதி காவலருக்கு, ஏற்கெனவே சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் முழு உருவ கம்பீரச் சிலை அமைக்க, அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த இந்த நாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாளருக்கு என் புகழஞ்சலியை செலுத்துகிறேன். சமூக நீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, ‘இடஒதுக்கீடு எங்கள் உரிமை’ என அனைவரையும் ஓங்கி முழங்கச் செய்தவர்.
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கும் இலக்கில் வி.பி.சிங்கும், தலைவர் கருணாநிதியும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள். வி.பி.சிங்கின் சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மை தொடர்ந்து வழிநடத்தட்டும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.