நான் 'ஊக்குவிக்கும்' பெண்: எழுத்தாளர் கொற்றவை பெருமிதம்

சென்னையை சேர்ந்த கொற்றவை. எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், நடிகை என பன்முகம் கொண்டவர். பெண்களின் சுதந்திரத்திற்காக எழுத்தாலும், செயலாலும் பாடுபடுபவர்.

அவர் மனம் திறக்கிறார்….:
நான் கோவா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கொங்கணி மொழி பேசும் பெண். 1964 மொழிப்போரின் போது அங்கிருந்து கேரளா, ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்து இறுதியில் சென்னை வந்தோம். அன்று முதல் எனது சொந்த ஊர் சென்னை தான். இங்கு பி.எஸ்சி., விஷூவல் கம்யூனிகேஷன் முடித்தேன். ஆசியாவின் முதல் பெண் திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.ஆர்., விஜயலட்சுமியிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தேன்.1998ல் சென்னையில் நடந்த அழகி போட்டியில் 'மிஸ் லுக் ஆப் தி இயர்' விருது பெற்றேன். ஜி.வி.பிரகாஷ் நடித்த 'பேச்சுலர்' படத்தில் நடித்தேன். தொடர்ந்து பல்வேறு படங்களில் தோழி, சகோதரி, அம்மா கேரக்டர்களில் நடித்துள்ளேன்.

லட்சுமி மேனன், யோகிபாபு நடித்து வரும் 'மலை' திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறேன். இன்னும் சமுதாய சிந்தனையுள்ள நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிக்க முன் வருவேன். குறிப்பாக பெண் சாதனையாளர்கள் பற்றிய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. பெண்களுக்கு தனி சுதந்திரம் வேண்டும் என்ற வேட்கையில் எழுத்தாளராகவும் உருவெடுத்தேன்.
ஆங்கில எழுத்தாளர் பால் ப்ராலிட்ச் எழுதிய 'ரோசா லுக் சம்பர்க்' வாழ்வும், பணிகளும் என்ற நுாலை தமிழில் மொழி பெயர்த்தேன். எழுத்தாளர் க்ருப்ஸ்கயா எழுதிய புத்தகத்தை 'உழைக்கும் மகளிர்' என தமிழில் மொழி பெயர்த்தேன்.

2009ம் ஆண்டில் இருந்தே பெண் சுதந்திரம், சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி கவிதைகளும் எழுதி வருகிறேன். பெண்ணியம் குறித்து 'யூடியூப்' ல் உரையாற்றி, வாசகர்களை பெற்றுள்ளேன். பெண்களின் ஆடை சுதந்திரம், தனிமனித சுதந்திரம் பற்றி தவறாக பேசுவதை அனுமதிக்க மாட்டேன். நடத்தையை வைத்து பெண்ணை மதிப்பிடுவதை கைவிட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

சிங்காரசென்னையாக்கும் முயற்சியாக சென்னையில் சுவர் முழுக்க அழகான ஓவியம் வரைந்துள்ளனர். அதில் கிண்டி ஒலிம்பியாட் சிக்னல் அருகே துாணில் 'ஊக்குவிக்கும் பெண்' வரிசையில் என் படத்தையும் வரைந்து எனக்கு பெருமை தேடி தந்துள்ளனர் என்றார்.
இவரை பாராட்ட [email protected]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.