நீலகிரி: பிரதம மந்திரி விவசாய நிதியுதவி பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிசெய்தால் மட்டுமே அடுத்த (14-வது) தவணைத்தொகை பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பும் விவசாயிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டிருந்த அறிவிபில், பிரதம மந்திரியின், பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிசெய்தால் மட்டுமே அடுத்த (14-வது) தவணைத்தொகை பெறமுடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை போல் நீலகிரி மாவட்டத்திலும் இதே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “பிரதம மந்திரி விவசாய உதவித்தொகை திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் 11,229 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த திட்டத்தில் பயனாளிகள் தொடர்ந்து பயனடைய இ-கே.ஒய்.சி., மற்றும் நில ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் 3,067 பயனாளிகள் இ.கே.ஒய்.சி. முடிக்காமலும், 1467 பயனாளிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமலும் உள்ளனர். தற்போது தபால் நிலையங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட ஜீரோ இருப்பு கணக்கு தொடங்க முன்வந்துள்ளது. எனவே விடுபட்ட விவசாயிகள் www.pmkisan.gov.in இணையதளத்தில் ஓ.டி.பி., உள்ளீடு செய்து தங்கள் பெயரை இணைத்து கொள்ளலாம் அல்லது இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் பி.எம். கிசான் செயலி மூலமாகவும் இணைக்கலாம். இதுதொடர்பாக 4 வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இதன்படி ஊட்டி வட்டாரத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊட்டி இத்தலார் வேளாண் கிடங்கு அலுவலகத்திலும், இன்று மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மஞ்சூரில் தாசில்தார் அலுவலகம், 28-ந் தேதி தும்மனட்டி, சோலூர், கடநாடு சமுதாயகூடம், ஊட்டி ரோஜா பூங்கா கூட்ட அரங்கம், 29-ந் தேதி பாலகொலா சமுதாயகூடம், 30-ந் தேதி எப்பநாடு, நஞ்சநாடு, உல்லத்தி சமுதாயகூடம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
குன்னூர் வட்டாரத்தில் இன்று (திங்கட்கிழமை) எடப்பள்ளி, மேலூர் கிராம சமுதாய கூடம், 27-ந் தேதி அதிகரட்டி சமுதாய கூடத்திலும், கோத்தகிரி வட்டாரத்தில் இன்று (திங்கட்கிழமை) கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், அரவேணு பஞ்சாயத்து அலுவலகம், 27-ந் தேதி நெடுகுளா சமுதாய கூடம், கம்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், பேரகணி சமுதாய கூடம், 28-ந் தேதி கீழ்கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலகம், சோலூர்மட்டம் வி.ஏ.ஒ. அலுவலகம், கெங்கரை சமுதாய கூடத்தில் முகாம்கள் நடைபெறுகிறது.
கூடலூர் வட்டாரத்தில் இன்று (திங்கட்கிழமை) தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், செமுள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், 27-ந் தேதி பந்தலூர் தாசில்தார் அலுவலகம், மூனனாடு, பி.பி.சி., அய்யன்கொல்லி, 28-ந் தேதி நெலாக்கோட்டை, பாட்டவயல் ஆகிய கிராம நிர்வாக அலுவலகங்களில் முகாம் நடைபெற உள்ளது.