வில்லி நடிப்பில் கில்லி: மிரட்டும் மேனகா பிரியா

கண்களால் காதல் பேசிவிளையாடும் வெண்ணிலா, இவள் நடக்கும் இடமெங்கும் நடக்கும் இளமை விழா… கதையின் கதாபாத்திரங்களில் நிரம்பி வழியும் கதாநாயகி, அழகால் பார்ப்பவர்களை மயக்கும் மாய மோகினி, மிரட்டும் நடிப்பால் கில்லி ஆடும் வில்லி என சின்னத்திரை, பெரியதிரையில் வலம் வரும் நடிகை மேனகா பிரியா பேசுகிறார்…

நடிகை மேனகா பிரியாவின் சின்ன அறிமுகம்?
பி.இ., படிச்சிட்டு ஒரு ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்தேன். கொரோனா ஊரடங்கிற்கு முன் விபத்து ஏற்பட்டதால் உடல் நலமின்றி போனது. அதனால் வேலை தொடர முடியலை. இப்போ சூப்பரா ரெடியாகி நடிகையாக மாறியிருக்கிறேன்.

திடீரென நடிப்பில் எப்படி அது உங்கள் கனவா?
சும்மா என்னை பார்த்தாலே 'நீ மாடலிங் பண்றீயானு கேட்பாங்க'. ஒரு டிவி ரியாலிட்டி ஷோ போன போது கூட நடிக்க கேட்டாங்க. ஆனால், அப்போதைய சூழ்நிலையால் நடிக்க போகலை. மாடலிங், போட்டோ ஷூட் தான் பண்ணிட்டு இருந்தேன். சரி முயற்சி பண்ணுவோம்னு தான் வந்தேன்.

நீங்கள் நடித்த படங்களின் பட்டியல் சொல்லுங்க?
பட்டியல் அளவுக்கு எல்லாம் நடிக்கலை… நடிகர் விமலுடன் ஒரு படம், ஜீவா உடன் 'பாம்பாட்டம்' விஜய் ஆன்டனியுடன் ஒரு படம் உட்பட மலையாள படம் ஒன்றில் நடிச்சிருக்கேன். ஆனால், இந்த படமெல்லாம் ரிலீஸ் ஆகலை. சீரியலில் நடிக்க வந்த நாம் சினிமாவில் ஏன் நடிக்கிறோம்னு இப்போ சீரியல் பக்கம் வந்துட்டேன்.
முதல் சீரியல் 'சித்திரம் பேசுதடி'யில் நடித்த சின்ன கேரக்டர் பெரியளவில் ரீச் ஆனது. அதற்கு பின் 'ஒரு ஊர்ல ராஜகுமாரி', 'செம்பருத்தி', 'புது புது அர்த்தங்கள்', 'தாலாட்டு', 'செல்லமா' சீரியல்களில் நடித்தேன். ரீசன்ட்டா 'இந்திரா'வில் நடிச்சிட்டு இருக்கேன்.

சீரியல்களில் உங்களுக்கு கிடைத்த கேரக்டர்கள்?
நான் பார்க்க கொஞ்சம் 'போல்டா' இருப்பேன். வாய்ஸ் மிரட்டுவது போல் இருக்கும். அதனால் தான் என்னவோ எனக்கு எல்லா சீரியல்களிலும் வில்லி கேரக்டர் தான் கிடைக்குது. 'இந்திரா'வில் டெரர் வில்லியா வரேன். என்ன கேரக்டர் கிடைத்தாலும் நடிப்பேன். பாஸிட்டிவ் கேரக்டர் கிடைத்தால் நல்லா இருக்கும்.

நடிப்பு பயணத்தில் நீங்கள் கற்றதும், பெற்றதும்?
சினிமா, சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டர்ல வந்திருக்கேன். சப்பாடு, துாக்கம் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கேன். நடிப்பை கற்று, இயக்குனர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளேன். அம்மா, பின்னணி பாடகரான என் நண்பர் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்குறாங்க.
instagram: menaga_priya_

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.