நாக்பூர்: ‘ஆன்லைன்’ வாயிலாக நுாதன மோசடியில் ஈடுபட்டு, அப்பாவி மக்களிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய ஆறு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
‘ஆன்லைன்’ வாயிலாக பண ஆசைகாட்டி மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் குறித்து, மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த கெமிக்கல் இன்ஜினியர், போலீசில் புகார் அளித்தார்.
ஆசை வார்த்தை
போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து, நாக்பூர் ‘சைபர் கிரைம்’ இணை கமிஷனர் அர்சித் சந்தக், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த மோசடி கும்பல் மிகப் பெரிய பின்னணியுடன் செயல்பட்டு வருகிறது. ‘ஆன்லைன்’ வாயிலாக வெளியாகும் சில வீடியோக்களுக்கு, ‘லைக்’ இடுவது மற்றும் சில பொருட்கள் குறித்து நேர்மறையான விமர்சனங்களை எழுதுபவர்களுக்கு பணம் அளிப்பதாக முதலில் ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர்.
இதை நம்பி அவர்களின் வலையில் விழுபவர்களுக்கு சில மாதங்கள் கூறியபடி பணத்தை அளிக்கின்றனர்.
இதனால் அந்த வேலை மீது, சம்பந்தப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. அதன்பின், பெரிய தொகை தருவதாக கூறி, அதற்கு முன் பணம் செலுத்தும்படி கூறுகின்றனர்.
அதிலும், கூறியபடி பணத்தை திருப்பி அளிக்கின்றனர். ஒரு கட்டத்தில், அவர்களிடம் வேலை செய்பவர்களிடம் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு காணாமல் போகின்றனர்.
ஏமாந்தவர்கள் அவர்களை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள இயலாமல் போகிறது.
இந்த மோசடி பல்வேறு மாநிலங்களிலும் தொடர்கிறது.
இது குறித்து விசாரணை நடத்தி வந்த போது, குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த மீத் வியாஸ் என்பவர், ‘கிரிப்டோகரன்சி’ வாயிலாக, சீனாவைச் சேர்ந்த தனிநபருக்கு பணப்பரிமாற்றம் செய்தது தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரித்த போது, இந்த மோசடி கும்பலை சேர்ந்த மேலும் ஐந்து பேர் பிடிபட்டனர்.
விசாரணை
இந்த விவகாரத்தில், மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த அகாஷ் திவாரி, ரவி வர்மா, மஹாராஷ்டிராவின் நல்லாசோபராவை சேர்ந்த சந்தோஷ் மிஸ்ரா, சூரத்தை சேர்ந்த மீத் வியாஸ், ராஜஸ்தானை சேர்ந்த அன்கித் தாதெர், அரவிந்த் சர்மா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளோம்.
இவர்களுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்