Cases against Wagner chief will not be dropped | வாக்னெர் தலைவர் மீதான வழக்குகள் கைவிடப்படாது

மாஸ்கோ, ‘ரஷ்யாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட, ‘வாக்னெர்’ என்ற தனியார் ராணுவ அமைப்பின் தலைவரான யேவ்கெனி பிரிகோஷின் மீதான வழக்குகள் கைவிடப்படாது’ என, ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமான யேவ்கெனி பிரிகோஷின், வாக்னெர் என்ற தனியார் ராணுவத்தை நடத்தி வருகிறார்.

புடினுக்காக, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரில், இந்த தனியார் படையும் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் பிரிகோஷின் கிளர்ச்சியில் ஈடுபட்டார். ரஷ்யாவின் முக்கிய நகரான ரோட்ஸ்வான் டானை அவரது படைகள் கைப்பற்றின.

தலைநகர் மாஸ்கோ நோக்கி முன்னேறும்படி தன் படைக்கு அவர் உத்தரவிட்டுஇருந்தார். ஆனால், சில மணி நேரங்களிலேயே, இந்த உத்தரவை அவர் திரும்பப் பெற்றார்.

அண்டை நாடான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் நடந்த பேச்சுக்குப் பின், ரஷ்ய அரசுக்கு எதிரான போராட்டத்தை அவர் கைவிட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, பிரிகோஷின் உடன் ரஷ்ய அரசு சமரசம் செய்ததாக கூறப்படுகிறது.

இதன்படி, ரஷ்யாவில் இருந்து பிரிகோஷின் வெளியேறி, பெலாரசில் தஞ்சமடைவார் என்றும், அவர் மற்றும் அவரது தனியார் ராணுவ அமைப்பின் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த திடீர் உள்நாட்டு புரட்சி, அதிபர் புடினுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தற்போதைக்கு உள்நாட்டில் பெரும் கலவரம் ஏற்படுவது தடுக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் இதுபோன்று நடந்தால் என்ன செய்வது என்ற ஆலோசனையில் புடின் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பெலாரசில் பிரிகோஷின் தஞ்சமடைந்தாலும், அவர் மீதான வழக்குகள் தொடரும் என, ரஷ்ய அரசின் உயரதிகாரிகள் நேற்று தெரிவித்துஉள்ளனர்.

தற்போதைய நிலையில், வாக்னெர் படை மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதனால், அதில் உள்ள வீரர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.