புதுடில்லி, போட்டி தேர்வுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும், ‘ராவ்ஸ் ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள்’ மற்றும் ‘சீக்கர்ஸ் எஜுகேஷன்’ ஆகிய நிறுவனங்கள், விளம்பரங்கள் வாயிலாக மாணவர்களை தவறாக வழி நடத்திய குற்றத்திற்காக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
இது குறித்து, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா பெருந்தொற்று பரவல் சற்று கட்டுக்குள் வந்த 2021 காலகட்டத்தில், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்பிய பலர், இணையதளங்கள் மற்றும் ‘மொபைல் போன்’ செயலி வாயிலாக, ஹோட்டல் அறைகளுக்கு முன்பதிவு செய்தனர்.
ஆனால், திடீரென தொற்று பரவல் தீவிரமடைந்த காரணத்தால் பலர் கடைசி நிமிடங்களில் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது போல ரத்து செய்யப்பட்ட ஹோட்டல் முன்பதிவுக்கான தொகையை சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப தரவில்லை.
அந்த வகையில், ‘யாத்ரா, ஹேப்பி ஈஸி கோ, ஈஸி மை டிரிப்’ ஆகிய, ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்கள் மீது, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதை தொடர்ந்து, நிலுவை தொகையை திரும்ப பெற வேண்டியோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
கடந்த 2022, ஆகஸ்ட் 13ம் தேதி நிலவரப்படி, 14.69 கோடி ரூபாயாக இருந்த நிலுவைத் தொகை தற்போது 7.46 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும், போட்டி தேர்வுகளுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும், ‘ராவ்ஸ் ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள்’ மற்றும் ‘சீக்கர்ஸ் எஜுகேஷன்’ என்ற நிறுவனங்கள், நாளிதழ்களில் அளித்த விளம்பரங்களில் போலியான தகவல்களை அளித்து மாணவர்களை தவறாக வழிநடத்தி உள்ளன.
இந்நிறுவனங்களுக்கு முறையே 1 லட்சம் மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்