சென்னை: நடிகர் விக்ரம் லீட் கேரக்டரில் நடித்து வரும் தங்கலான் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பா ரஞ்சித் இயக்கத்தில் இந்தப் படத்தின்மூலம் விக்ரம் இணைந்துள்ளார். படத்தில் விக்ரம் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்றுவந்த தங்கலான் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.
தங்கலான் படத்தின் சென்னை சூட்டிங் நிறைவு: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது தங்கலான். இந்தப் படத்தை இயக்குநர் பா ரஞ்சித் இயக்கி வருகிறார். கோலார் தங்கவயல் மற்றும் அதன் மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் சூட்டிங் கேஜிஎப்பில் நேரடியாக சென்று எடுக்கப்பட்ட நிலையில், அதில் விடுபட்ட காட்சிகள் சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு எடுக்கப்பட்டது.
கேஜிஎப்பில் இந்தப் படத்தின் சூட்டிங் 50 நாட்களை தாண்டி எடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை, மதுரை, ஒகனேக்கல் போன்ற இடங்களிலும் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட்டது. இடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக விலா எலும்பில் விக்ரமிற்கு காயம் ஏற்பட்ட நிலையில், ஏறக்குறைய ஒரு மாத காலம் அவர் ரெஸ்ட் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து சென்னை சூட்டிங்கில் அவர் பங்கேற்ற நிலையில், தற்போது சென்னை ஈவிபியில் நடைபெற்ற சூட்டிங் நிறைவடைந்துள்ளது.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துவரும் நிலையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இதனிடையே இந்தப் படத்தன் அடுத்தடுத்த அப்டேட்கள் தற்போது வெளியாகியுள்ளன. தங்கலான் படத்தில் 30 வயது இளைஞர் மற்றும் வயதானவர் கேரக்டர்களில் விக்ரம் நடித்துள்ளாராம். கடந்த ஐந்து நாட்களாக படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் கொட்டும் மழையில் விக்ரம், மாளவிகா, டேனியல் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூல் மீண்டும் மதுரையில் நடக்கவுள்ளது. முன்னதாக மதுரையில் பிரம்மாண்டமான கிராமம் போன்ற செட் அமைத்து சுதந்திர காலத்துக்கு முந்தைய கதைக்களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது அந்த செட்டிலேயே பேட்ச் வேலைகளை படக்குழு மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்காகத்தான் மதுரை செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மேலும் ஒரு வாரம் சூட்டிங் நடத்தப்பட்டு, அத்துடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் புதன்கிழமை மதுரை சூட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு வாரத்தில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, விஎப்எக்ஸ் மற்றும் 3டி கன்வெர்ஷன் போன்ற பணிகளை படக்குழு மேற்கொள்ளவுள்ளது. இதனிடையே படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளதாக படத்தின் கலைஞர்கள் தற்போது மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.