லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் `லியோ’ திரைப்படம் விரைவில் திரைக்காணவிருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் விஜய் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் பேசிய விஜய், இயக்குநர் வெற்றி மாறனின் ‘அசுரன்’ பட வசனத்தைக் குறிப்பிட்டு கல்வியின் முக்கியத்துவம் பற்றிப் பேசியிருந்தார். மேலும், “அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் போன்றோரைப் படிக்க வேண்டும் என்று விஜய் பேசியிருந்தார்.

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வெற்றி மாறன், “ஒரு சினிமாவில் நாம் சொல்கின்ற ஒரு விஷயம், சமூகத்துல மிக முக்கியமான ஒரு நபரிடம் போய் சென்றடையும்போது அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத்தான் நான் பார்க்கிறேன். அம்பேத்கர், பெரியார், காமராஜர் உடன் சேர்ந்து அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார். இது பெரும் பேசுபொருளாகியிருந்தது.
இந்நிலையில் அண்மையில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ள வெற்றிமாறன், நடிகர் விஜய்யுடன் இணைந்து படம் செய்வது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

“நானும் விஜய்யும் ரொம்ப நாளாகவே இணைந்து படம் பண்ணுவது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். விஜய் சார் ரெடியாத்தான் இருக்கார். என்னுடைய கமிட்மென்டை எல்லாம் முடிச்சிட்டு அவருடன் சேர்ந்து படம் பண்ணலாம்னு இருக்கேன். அந்நேரத்தில், நான் சொல்லும் கதைக்கு அவர் ஓகே சொன்னால் நாங்கள் இருவரும் இணைந்து நிச்சயமாகப் படம் பண்ணுவோம்” என்று கூறியுள்ளார்.
வெற்றிமாறனின் லைன் அப்பில் `விடுதலை 2′, `வாடிவாசல்’, `வடசென்னை 2′ படங்கள் அடுத்தடுத்து வரிசைக் கட்டிக் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.