இதென்ன கேரளாவிற்கு வந்த சோதனை? கடவுளின் தேசத்தில் தவியாய் தவிக்க விட்ட பருவமழை!

கடவுளின் தேசம் என்றால் சட்டென நினைவுக்கு வருவது கேரளா மாநிலம். அதுவும் நம்ம தமிழ்நாட்டிற்கு பக்கத்தில். கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நினைத்தால் போதும். வண்டியை எடுத்து கொண்டு சட்டுனு கிளம்பிவிடுவர். பச்சை பசேலென்று காணப்படும் இயற்கையை ரசிக்க, இனிக்க இனிக்க பேசும் மலையாள மொழியை கேட்க, விடுமுறையை கொண்டாடி தீர்க்க பிளான் போட்டு சென்றுவிடுவர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை

கேரளாவின் செழிப்பிற்கு முக்கிய காரணம் பருவமழையும், அதை சரியான முறையில் பயன்படுத்தும் திட்டங்களும் தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் தென்மேற்கு பருவமழை தான் கேரளாவின் பிரதானம். ஜூன் தொடங்கிவிட்டாலே கேரளாவில் மழை தொடங்கி வெளுக்க ஆரம்பித்துவிடும். இரண்டு, மூன்று மாதங்கள் ஒரே ஜில்ஜில் அனுபவம் தான். தென்மேற்கு பருவமழை தொடங்கி சுமார் ஒருமாத காலம் நிறைவு பெறப் போகிறது.

பருவமழை பற்றாக்குறை

இதுவரை போதிய அளவு மழை பெய்து கேரளாவின் பசியை ஆற்றியிருக்கிறதா? என்றால் இல்லை என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். வழக்கத்தை விட 65 சதவீதம் குறைவான மழைப்பொழிவை அளித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சராசரியை விட குறைவாகவே மழை பெய்திருக்கிறது. இது அம்மாநில மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அடுத்தடுத்து உருவான புயல்கள்

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவான புயல்கள் பருவமழையின் தீவிரத்தை தாமதப்படுத்தி விட்டன. இதனால் கடந்த வாரம் தான் சற்றே தீவிரம் அடைய தொடங்கியதாம். தற்போது பருவமழையின் தீவிரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் தென்மேற்கு திசையை நோக்கிய காற்று வலுப்பெறத் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் அதிகப்படியான மழை பெய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அறிவிப்பின்படி, கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏனெனில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருக்கிறதாம். அடுத்த 5 நாட்களை பொறுத்தவரை பரவலான நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

சராசரி மழை பெய்யும்

ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு முக்கியமான விஷயம் இடம்பெற்றுள்ளது. எல் நினோ நிகழ்வால் தென்மேற்கு பருவமழை பாதிக்கப்பட்டாலும் சராசரி மழையை கட்டாயம் தரும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் கேரள மாநிலம் அதிகப்படியான மழையை பெறும் என்று தெரிகிறது. எனவே கேரளா செல்லும் திட்டமிட்டுள்ள தமிழக மக்கள் வானிலையை கவனித்து விட்டு செல்வது நல்லது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.