போபால்: திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலன் அடைவார்கள். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.
பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். கோவா -மும்பை, பாட்னா -ராஞ்சி, போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர், பெங்களூரு-ஹூப்ளி உள்ளிட்ட 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2 ரயில்கள் மத்தியப் பிரதேசத்திலும், ஒன்று கர்நாடகாவிலும், ஒன்று பீகாரிலும், மும்பை-கோவா வழித்தடத்திலும் இன்று முதல் இயங்குகின்றன. வந்தே பாரத் ரயில்சேவையை தொடங்கி வைத்த பிறகு போபாலில் பாஜக நிர்வாகிகளுடன், பூத் பணியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது கட்சி நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
அப்போது, பிரதமர் மோடி ஊழல் குறித்தும் வாரிசு அரசியல் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பிரதமர் மோடி கூறுகையில், ” திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலன் அடைவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் காந்தி குடும்பம் மட்டுமே பலன் அடையும். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல.
நாட்டு நலனுக்காகவும் சந்ததிகள் முன்னேற்றத்திற்காகவும் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும். ஊழல்கள் பிடிபட்டதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கின்றன. ஊழல் செய்தவர்களை விட மாட்டோம். அவர்கள் சிறை செல்ல நேரிடும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வலுவான பெரும்பான்மையான ஆட்சியை பிடிக்கும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள்” என்றார்.
தொடர்ந்து பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, முஸ்லீம்கள் தங்களை யார் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொது சிவில் சட்டம் என்ற பெயரில் பிற மக்களை(முஸ்லீம்கள்) சிலர் தூண்டிவிடுவதை நாம் இன்று பார்க்கிறோம். முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு அநீதி இழைக்கிறார்கள்.
ஒரு நாட்டை எப்படி 2 சட்டங்கள் கொண்டு நடத்த முடியும்? உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூறியுள்ளது. பொது சிவில் சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சியினர் விளையாடுகிறன்றன. பொது சிவில் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றன. இதனால், பொது சிவில் சட்டத்தை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும்” என்றார்.