மும்பை: மும்பையைச் சேர்ந்த நபர் ஸ்கூட்டரில் 7 குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வீடியோ ட்விட்டரில் வைரலானது. ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் இரண்டு குழந்தைகளும், பின்பக்கத்தில் மூன்று குழந்தைகளும், மேலும் இரண்டு குழந்தைகள் நின்றுகொண்டு பயணிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து அந்த ட்விட்டர் பயனாளர் “பொறுப்பற்ற பித்துப்பிடித்த நபர் ஏழு குழந்தைகளுடன் சவாரி செய்கிறார். ஏழு குழந்தையின் உயிரை பணயம் வைத்ததற்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த குழந்தைகளின் பெற்றோர் மீதும்வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று பதிவிட்டிருந்தார். அதை பார்த்த மும்பை போக்குவரத்து காவல் துறையினர், குழந்தைகளை ஆபத்தான வகையில் அழைத்துச் சென்ற அந்த நபரை கைது செய்தனர்.
மேலும், அந்த நபர் மீது அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்று உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.