நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
நம் நாட்டின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடி வருகின்றன.
இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை, வரும் நவ., 12ல் கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பது, அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் நீண்ட கால கோரிக்கை.
இதை, நியூயார்க் சட்டபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியான ஜெனிபர் ராஜ்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இது தொடர்பாக நியூயார்க் சட்டசபையில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நியூயார்க் நகரில் தீபாவளியை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியதாவது:
தீபாவளிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் மசோதாவில், கவர்னர் கேத்தி ஹோச்சுல் கையெழுத்திடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது தீபாவளியை கொண்டாடும் அனைத்து சமூகங்களின் வெற்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
நியூயார்க் சட்டசபை உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் கூறுகையில், ”தீபாவளிக்கு நியூயார்க் பள்ளிகளில் விடுமுறை விட வேண்டும் என்பது, 20 ஆண்டு கால கோரிக்கை.
”இதற்கான போராட்டங்களை இந்திய வம்சாவளியினர் தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர். தற்போது இதற்கு பலன் கிடைத்துஉள்ளது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்