ஆஸ்கர் விருதுக் குழு உறுப்பினராக இயக்குநர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்கர் விருதுக் குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைத்துறைக் கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்தவகையில் தமிழ் திரையுலகில் இருந்து ஏற்கனவே நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் 2023-க்கான ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது ஆஸ்கர் குழு.
தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளைக் கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டிற்கான இந்த புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 398 பேருக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய திரைபிரபலங்களான இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஒளிப்பதிவாளர் கே. கே. செந்தில் குமார், தயாரிப்பாளர் கரண் ஜோஹர், உள்ளிட்ட சிலர் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்ற பிரபலங்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆஸ்கர் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இயக்குநர் மணிரத்னத்திற்கு ட்விட்டரில் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations #Manirathnam sir for becoming member of the @TheAcademy …. #Oscar #PS 1& 2 #Dilse #Roja #Bombay and many more! Welcome to the club❤️
— A.R.Rahman (@arrahman) June 28, 2023
அவர் பகிர்ந்த அந்த பதிவில் , “ஆஸ்கர் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இயக்குநர் மணிரத்னத்திற்கு வாழ்த்துகள்; #பொன்னியின் செல்வன், #ரோஜா, #பாம்பே, #தில் சே மேலும் பல..! ஆஸ்கர் குழுவுக்கு உங்களை வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.