காரைக்குடி: காரைக்குடி 1928-ம் ஆண்டு நகராட்சியானது. வடக்கே கழனிவாசலும், தெற்கே செஞ்சையும், மையத்தில் கல்லுக்கட்டி பகுதியும் இருந்தன. கல்லுக்கட்டி பகுதியில் உள்ள கொப்புடைய நாயகி அம்மன் கோயில் முன்பாக பழமையான மணிக்கூண்டு உள்ளது.
1939-ம் ஆண்டு ஏப்.14-ம் தேதி திறக்கப்பட்ட இந்த மணிக் கூண்டு 84 ஆண்டுகளை கடந்தும் இன்றும் காரைக்குடியின் பெருமையைச் சொல்லும் விதமாக கம்பீரமாக நிற்கிறது. இதன் உயரம் 50 அடி முதல் 60 அடி வரை இருக்கும். அக்காலத்தில் காரைக்குடியின் அடையாளச் சின்னமாக (லேண்ட் மார்க்) இருந்தது. இதில் நேரத்தின் அருமையை உணர்த்த ‘காலம் போற்று’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் ஒவ்வொரு மணி நேரமும் ஒலி எழுப்பும். இதன் ஓலி நகர் முழுவதும் கேட்கும். மணிக்கூண்டின் மேலே சென்றுவர படிக்கட்டுகளும் உள்ளன. இந்த மணிக்கூண்டை காரைக்குடி வைர வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த ‘ராவ் பகதூர்’ பட்டம் பெற்ற ரத்தினவேல் என்பவர், ‘திவான் பகதூர்’ பட்டம் பெற்ற தனது தந்தை சுப்பையா நினைவாகக் கட்டினார்.
அதே ஆண்டில் அந்த மணிக்கூண்டை நகராட்சியிடம் ஒப்படைத்தார். நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மணிக்கூண்டு பராமரிப்பின்றி இருந்தது. இந்நிலையில் நகராட்சியின் அனுமதி பெற்று, கடந்த ஆண்டு காரைக்குடி ஏ.டி.ஏ.நடராஜன் செட்டி அன்ட் கோ நகைக்கடை சார்பில் ரூ.4 லட்சத்தில் புனரமைக்கப்பட்டது. தொடர்ந்து அக்கடை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பழமைக்கு என்றுமே தனி மதிப்புதான்.