சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் கை அகற்றப்பட்டதற்கு அலட்சியமான சிகிச்சையே காரணமா என்பது குறித்து விசாரிக்க மூன்று பேரை நியமித்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தை முகமது மஹீரை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். இந்தக் குழந்தை குறை மாதத்தில் பிறந்த குழந்தை. 32 வாரத்தில் பிறந்த அந்தக் குழந்தை பிறந்தது முதல் தற்போது வரை 1.5 கிலோ எடை மட்டுமே கொண்டதாக உள்ளது. இக்குழந்தைக்கு குறைமாத குழந்தைகளுக்கு இருக்கின்ற பல்வேறு பிரச்சினைகள் கடந்த ஓராண்டாக இருந்து வந்துள்ளது. தலையில் ரத்தகசிவு , இதயத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளன. தொடர் சிகிச்சைகள் மூலமாகத்தான், குழந்தையின் உயிரைக் காப்பாற்றி வைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தபோது, அந்தக் குழந்தைக்கு ட்ரிப்ஸ் போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தக் குழந்தையின் கை ஆரம்பத்தில் சிவப்பு நிறத்தில் இருந்ததாகவும், பின்னர் கருப்பு நிறத்துக்கு மாறி அழுகியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சனிக்கிழமை இரவு அந்த குழந்தையை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்த குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செவிலியர்களின் தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை அகற்றப்பட்டதா? சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “அந்த குழந்தை 32 வாரத்தில் பிறந்திருக்கிறது. குறைப் பிரசவத்தில் பிறந்திருக்கிற குழந்தை என்பதால் பிறக்கும்போதே பல்வேறு பிரச்சினைகளுடன் இருந்துள்ளது. அதற்கான சிகிச்சை அளித்திருக்கிறார்கள். குழந்தைக்கு ஊசி போடும்போது அலட்சியமாக செயல்பட்டனரா என்பது குறித்து விசாரிக்க மூன்று அலுவலர்களை நியமித்திருக்கிறேன். இன்னும் 2-3 நாட்களில் விசாரணை முடிவு வந்துவிடும். அந்தக் குழந்தையை உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்க செய்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருக்கிறோம்.
எந்த மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியராக இருந்தாலும், யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பணிக்கு வருவது இல்லை. மருத்துவமனைக்கு வருபவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் வருகின்றனர். பணியின்போது ஏதாவது கவனக்குறைவு ஏற்பட்டால், அந்த கவனக்குறைவுக்கு அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.