புதுடெல்லி: மத்திய அரசு அமலாக்க முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு வட கிழக்கு மாநிலங்களின் பழங்குடிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோராமில் 94.4%, நாகாலாந்தில் 86.5%, மேகாலயாவில் 86.1% பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது பழக்க வழக்கங்கள் பொது சிவில் சட்ட அமலால் முடிவுக்கு வந்துவிடும் என அஞ்சுகின்றனர்.
மேகாலயாவின் பழங்குடிகளில் ஆண் மகனை போல், அக்குடும்பத்தின் பெண்களின் கடைசி மகள் நிதி உள்ளிட்ட அனைத்தையும் நிர்வாகிக்கும் குடும்பத் தலைவியாக உள்ளார். வழக்கமாக மணமான பின் மகள் தன் மாமனார் வீட்டிற்கு செல்கிறார். ஆனால், இங்குள்ள காரோஸ் எனும் பழங்குடியில் மணமாகி மணமகன்தான் மாமனார் வீட்டில் வசிக்கச் செல்கிறார். நாகா பழங்குடியில் பெண்களுக்கு சொத்து உரிமை அளிப்பதில்லை. இது போன்ற தம் பாரம்பரியங்களை பொது சிவில் சட்டத்தால் கைவிட வேண்டி இருக்கும் என அஞ்சுகின்றனர்.
திருமணம், விவாகரத்து மற்றும் குழந்தை தத்து எடுப்பு ஆகியவை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேகாலயாவில் தனித்துவம் பெற்றவை. பொது சிவில் சட்டத்தால் இம்மூன்றிலும் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர்.
இதனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராக இருந்தும் முதல்வரான கான்ராட் கே.சங்மா, பொது சிவில் சட்டம் இந்திய இறையாண்மைக்கு முற்றிலும் எதிரானது எனக் கருத்து கூறியுள்ளார்.
இம்மாநிலப் பழங்குடி கவுன்சிலின் மூன்று முக்கிய உறுப்பினர்களும் கூடப் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்ப்பது என முடிவு எடுத்துள்ளனர்.
மிசோராமில் பலவகை பழங்குடிகளும் அதில் பல உட்பிரிவுகளும் உள்ளன. அதேபோல், இங்கு கிறிஸ்துவப் பழங்குடிகளிலும் பல பிரிவுகளும், உட்பிரிவுகளும் உள்ளன. இந்த அனைத்து மக்களுக்காக தனிச்சட்டம் உள்ளது. அதன்படி, மத்திய அரசு அமலாக்கும் எந்த சட்டமும் அதன் சட்டப்பேரவையில் விவாதித்து அமலாக்கப்படுவது அவசியம்.
இச்சூழலில், கடந்த பிப்ரவரி14-ல் பொது சிவில் சட்டத்திற்குஎதிராக மிசோராமின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே பொது சிவில் சட்டத்தை அனைவரும் இணைந்து எதிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாகாலாந்து மாநிலம் 1963-ல் உருவாக்கப்பட்ட போது, நாகாபழங்குடிகளின், நிலம், குடும்பம்உள்ளிட்ட அனைத்து பழக்கவழக்கங்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசின் அனைத்து சட்டங்களையும் நாகாலாந்தின் சட்டப்பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட பின்பே அமல் செய்யப்படும்.
பொது சிவில் சட்டத்திற்கு முஸ்லிம்களும், சீக்கியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுடன் பழங்குடிகளும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புதெரிவித்திருப்பது மத்திய அரசிற்குநெருக்கடியை அதிகரித்துள்ளது. ஏனெனில், முஸ்லிம்கள், சீக்கியர்களுடன் பழங்குடிகளும் போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனி மெஜாரிட்டி கொண்டதால் அந்த மசோதாவை மத்திய அரசு, மக்களவையில் மட்டும் நிறைவேற்றும் வாய்ப்புகள் உள்ளன. மாநிலங்களவையில் மெஜாரிட்டி இல்லாததன் காரணமாக அது நிறைவேறுவதில் சிக்கல் எழும் வாய்ப்புகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.