இலங்கை-டிரினிடாட் மற்றும் டொபாகோ இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு அண்மையில் இலங்கையுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை முறைப்படுத்தும் என்று டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் புதிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ரோஜர் கோபோல் தெரிவித்தார்.

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் புதிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ரோஜர் கோபோல் நேற்று முன்தினம் (03) பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முறைப்படுத்துவதன் மூலம் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

புதுடில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து நாட்டின் விவகாரங்களை நிர்வகிக்கும் உயர் ஸ்தானிகர், ஜூன் மாதம் 30 ஆந் திகதி கண்டியில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.

இதன்போது, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் தொழில், கரும்பு மற்றும் ஏனைய விவசாயப் பொருட்கள் போன்ற புதிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உயர் ஸ்தானிகருடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இரு நாடுகளினதும் வெளிநாட்டு நிதிப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு இடையில், பணமோசடி செய்பவர்கள், பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பவர்கள் மற்றும் ஏனைய குற்றவியல் அமைப்புகள் பற்றிய தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக, டிரினிடாட் மற்றும் டொபாகோ நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இலங்கை நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.