சீமான் பகிரங்க சவால்.. மணிப்பூர் கலவரத்தை அரைமணிநேரத்தில் நிறுத்திக் காட்டுகிறேன்

தேனி:
என்னிடம் நாட்டை கொடுங்க, அரைமணிநேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்திக் காட்டுகிறேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

கூறியுள்ளது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மேலும், ஒரே சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பாக ஒரே சுடுகாட்டை கொண்டு வாருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கை எனக் கருதப்படுகிறது. இதற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து சீமானிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

இந்தியாவில் இப்போது இருக்கும் சட்டத்தால் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? நமது அரசமைப்புச் சட்டத்தால் நாட்டில் அமைதியின்மை, வன்முறைகள் ஏதாவது நடக்கிறதா? நாட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. கல்வி மேம்பாடு, பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை என எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. இதையெல்லாம் விட்டுவிட்டு, ஒரே சட்டத்தை கொண்டு வருவதுதான் இன்றைக்கு முக்கியமா?

எப்போது பார்த்தாலும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்று ஒரே ஒரே என்றுதான் மத்திய அரசு கூறி வருகிறது. சரி, ஒரே சட்டம் கொண்டு வருகிறீர்களே.. முதலில் அனைத்து சமூக மக்களுக்கும் ஒரே சுடுகாடு இருக்கிறதா? நாட்டில் அனைவருக்கும் ஒரே குளம் இருக்கிறதா? ஒரு கோயில் இருக்கிறதா? முதலில் அந்த ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்துவிட்டு வாருங்கள். பிறகு ஒரே சட்டம் கொண்டு வருவது குறித்து யோசிக்கலாம்.

ஒரே சட்டம் கொண்டு வந்தால் அனைவரும் சமமாகிவிட முடியுமா? இன்றைக்கு கீழ் சாதியாக கருதப்படும் ஒருவர் மேல் சாதி ஆகிவிட முடியுமா? முதலில் சாதிய ஒடுக்குமுறைகளை ஒழியுங்கள். இன்றைக்கு மணிப்பூரிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. குக்கி என்ற பழங்குடி கிறிஸ்தவ மக்களை காடுகளில் இருந்து வெளியேற்றிவிட்டு அங்குள்ள கனிம வளங்களை சுரண்டுவதற்காக தான் மணிப்பூர் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது.

மைத்தேயி என்ற ஜாதி இந்துக்களை வைத்து குக்கி சமூக மக்களை விரட்ட முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. என்னிடம் நாட்டை கொடுங்கள். அரைமணிநேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்திக்காட்டுகிறேன் என சீமான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.