The Nationalist Congress Party will hold a meeting today | தேசியவாத காங்., கோஷ்டி இன்று ஆலோசனை

மும்பை, தேசியவாத காங்கிரசின் இரண்டு குழுக்களும் இன்று தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளன. இதில், யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு என்பது தெரியவரும்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், சமீபத்தில் இந்த கூட்டணி ஆட்சியில் இணைந்தார்.

அவர் துணை முதல்வராகவும், அவரது ஆதரவாளர்கள் எட்டு பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். சட்டசபையில், தேசியவாத காங்கிரசுக்கு, 53 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அஜித் பவாருக்கு, 36 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை.

இந்நிலையில் கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு தனக்கு உள்ளதாக அஜித் பவார் கூறியுள்ளார். அவருக்கு, 40 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவாருக்கு, 13 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு மட்டுமே உள்ளதாக, சரத் பவார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இரு தரப்பும் இன்று ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

சரத் பவார் தலைமையில் மதியம் 1:00 மணிக்கு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அவருடைய அண்ணன் மகனான அஜித் பவார், காலை 11:00 மணிக்கு கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டங்களுக்குப் பின், யாருக்கு எவ்வளவு பேரின் ஆதரவு உள்ளது என்பது தெளிவாக தெரியவரும்.

சபாநாயகர் விளக்கம்!

அஜித் பவார் மற்றும் அவருடன் அமைச்சராக பதவியேற்ற எட்டு பேரை தகுதி நீக்கம் செய்யும்படி, சரத் பவார் தரப்பில், சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேகர் நேற்று கூறியுள்ளதாவது:தேசியவாத காங்கிரஸ் ஆளும் கூட்டணியில் உள்ளதா அல்லது எதிர்க்கட்சியாக உள்ளதா என்பதில் முதலில் தெளிவு ஏற்பட வேண்டும். கட்சி பிளவுபட்டுள்ளதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், தேசியவாத காங்கிரசின் உண்மை நிலவரம் தெரியவந்தால் மட்டுமே இதில் நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.