உயரம் குறைவான பாத்திரத்தில் நடித்து தனது நடிப்பின் உயரத்தை கமல் அதிகமாக்கிக் கொண்ட படம் ‘அபூர்வ சகோதரர்கள்’.
இரண்டு பாத்திரங்களை ஒரே நடிகர் ஏற்று நடிக்கும் போது, இரண்டும் வெவ்வேறு பாத்திரம் என்று பார்வையாளர்களை நம்ப வைப்பது எந்தவொரு நடிகனுக்கும் ஒரு சவால். ‘அப்பு’ மற்றும் ‘ராஜா’ என்று இரண்டு பாத்திரங்களை ஏற்று அந்தச் சவாலை திறம்படக் கையாண்டார் கமல். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராஜா வேறு அப்பு வேறு என்றே மக்கள் நம்பினார்கள். இதுதான் ஒரு நடிகனின் அர்ப்பணிப்பிற்கான வெற்றி.

‘அப்பு’ கேரக்ட்டரின் டெக்னிக்கல் ரகசியங்கள்
படம் பார்த்த பிறகும் அப்பு பாத்திரத்தின் தாக்கம் மக்களின் மனங்களில் மறையவில்லை. ‘கமலால் எப்படி உயரம் குறைவான பாத்திரத்தில் நடிக்க முடிந்தது’ என்பது தொடர்பாக பல்வேறு யூகங்களை ஆச்சரியத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள். ‘நீங்கள் யூகித்ததையும் தாண்டி வேறு பல விஷயங்களை இதற்காக செய்திருக்கிறோம்’ என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் கமல். காலை மடிப்பது, பள்ளம் தோண்டி நிற்க வைப்பது என்கிற அடிப்படையான விஷயங்களைத் தாண்டி, கேமரா கோணங்கள், ஆப்டிகல் இல்யூஷன், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பலவற்றை முயன்று பார்த்தோம்” என்கிறார், ‘ஸ்பெஷல் எபெஃக்ட்ஸ்’ துறை நிபுணரான வெங்கி.
கிராஃபிக்ஸ் போன்ற சமாச்சாரங்கள் இன்று நமக்குப் பழகிவிட்டாலும் அந்தத் தொழில்நுட்பங்கள் அவ்வளவாக இல்லாத காலத்திலேயே அதற்கான ஆரம்பக் காலத்து முயற்சிகளை ஆர்வமுடன் செய்து பார்த்தவர் வெங்கி. அப்பு பாத்திரத்திற்காக பல சிரமங்களை கமல் அனுபவித்தாலும் அது மகத்தான வெற்றியை அடைந்ததில் அந்த வலிகள் மறந்திருக்கும்.
‘அப்பு’ பாத்திரத்தின் ‘டிரெய்லர்’ என்று புன்னகை மன்னனில் வரும் ‘சாப்ளின் செல்லப்பா’வைச் சொல்லலாம். அந்தப் படத்தின் ஒரு காட்சியில் உயரம் குறைவானவராக வந்து கலகலப்பூட்டி அசத்தியிருப்பார். ‘அப்பு’ மாதிரியான பாத்திரத்தை வைத்து எண்பதுகளில் ஒரு கதையை எழுதிய கமல், அதை பாலசந்தர் இயக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். ஆனால் கமலின் அசுரத்தனமான வளர்ச்சியை இனியும் தன்னால் கையாள முடியுமா என்கிற தயக்கத்தில் இருந்த பாலசந்தர், ‘இந்த திரைக்கதை ரொம்பவும் சிக்கலாக இருக்கிறது’ என்று மறுத்துவிட்டார். சில வருடங்களுக்குப் பிறகு அந்த புராஜெக்ட்டை கமலே கையில் எடுத்தார்.

கமல் ஆரம்பத்தில் எழுதிய கதையில் ‘அப்பு’ பாத்திரம் மட்டும்தான் இருந்தது. சர்க்கஸில் பணிபுரியும் உயரம் குறைவான ஒரு மனிதன், ஒரு பெண்ணிடம் காதலில் விழுவதும், அது தவறான புரிதலோடு பயணிப்பதும், இறுதியில் அந்தப் பெண்ணுக்கு தன் மேல் காதல் இல்லை என்பதை அறிந்து கலங்கி நிற்பதும்… என சார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’ பாணியில் சோகச்சுவை நிரம்பிய ஒரு காதல் கதையாக அது எழுதப்பட்டு சில நாள்கள் படப்பிடிப்பும் நடந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில், ‘இது வணிகரீதியான வெற்றியைப் பெற்றுத் தராது’ என்று இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் கருதியதை கமலும் ஒப்புக் கொண்டார். திரைக்கதை டாக்டரான பஞ்சு அருணாச்சலத்திடம் செல்ல, ‘ராஜா’ என்கிற வழக்கமான தோற்றத்தில் உள்ள கமலை இன்னொரு ஹீரோவாக இணைத்து ஜனரஞ்சகமான அம்சங்களோடு திரைக்கதையை விரிவாக்கித் தந்தார் பஞ்சு அருணாச்சலம்.
‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தின் கதை மிகப் பழைமையானது. அலெக்சாண்டர் டூமா எழுதிய ‘The Corsican Brothers’ என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டது. இரட்டைச் சகோதரர்களாகப் பிறக்கிறவர்கள், சூழ்நிலை காரணமாகப் பிரிந்து பிறகு தன் தந்தை கொலை செய்யப்பட்டதை அறிந்து இணைந்து கொலைகாரர்களைப் பழிவாங்குவார்கள்.
இந்தக் கருவை வைத்து உலகம் முழுக்க பல நாடகங்களும் திரைப்படங்களும் பிறந்தன. 1949-ல் ‘அபூர்வ சகோதரர்கள்’ என்கிற அதே தலைப்பை வைத்து ஜெமினி நிறுவனம் ஒரு திரைப்படத்தை உருவாக்கியது.
இந்த அடிப்படையான வரைபடத்தை வைத்துக் கொண்டு உயரம் குறைவான சர்க்கஸ் கலைஞன், கார் மெக்கானிக், நேர்மையான காவல்துறை அதிகாரி, நான்கு பணக்கார வில்லன்கள், காமெடி போலீஸ், சர்க்கஸ் சிங்கம், யானை, இனிமையான பாடல்கள், சுவாரஸ்யமான திரைக்கதை என்று ஜனரஞ்சகமான அம்சங்களை வைத்து தனது படத்தை உருவாக்கிவிட்டார் கமல்.

சேதுபதி, அப்பு, ராஜா – மூன்று கமல் பாத்திரங்கள்
நேர்மையான போலீஸ் அதிகாரியான சேதுபதி, கடத்தல் தொழில் செய்யும் நான்கு செல்வாக்குள்ள நபர்களைக் கைது செய்கிறார். ஆனால் ‘தனிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சி காரணமாக, சேதுபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்’ என்று அநீதியான தீர்ப்பு வருகிறது. பணியிலிருந்து விலகும் சேதுபதியை, அந்த நான்கு பணக்காரர்களும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்கிறார்கள். கர்ப்பிணியாக இருக்கும் சேதுபதியின் மனைவியின் வாயில் விஷத்தை ஊற்றுகிறார்கள்.
ஆனால் கொலைகாரர்களின் துரத்தலில் இருந்து எப்படியோ தப்பிக்கும் சேதுபதியின் மனைவி, இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார். சூழல் காரணமாக குழந்தைகள் பிரிகின்றன. ஒருவன் ராஜா. இன்னொருவன் அப்பு. முன்னவன் சராசரித் தோற்றம் கொண்டவன். பின்னவன், விஷத்தின் பாதிப்பு காரணமாகவோ, என்னவோ உயரம் குறைவான தோற்றத்தில் இருக்கிறான். ஒரு கட்டத்தில், நான்கு தீயவர்களால் தன்னுடைய தந்தை அநியாயமாகக் கொலை செய்யப்பட்டதை அறிந்து கோபம் கொள்கிறான் அப்பு. தன் புத்திசாலித்தனத்தை உபயோகித்து நால்வரையும் கொல்கிறான். இந்த கொலைப்பழி ராஜாவின் மீது விழுவதால் சில ஜாலியான குழப்பங்கள் நேர்கின்றன. கடைசியில் பழிவாங்கிய திருப்தியோடு அப்பு சிறைக்குச் செல்கிறான். படம் நிறைகிறது.

திறமையாக எழுதப்பட்ட திரைக்கதை
‘அபூர்வ சகோதரர்கள்’ திரைக்கதையை நகைச்சுவையும் தீவிரமும் சரிசமமான கலவையில் இருக்கும்படியாக கச்சிதமாக உருவாக்கியிருந்தார் கமல். நேர்மையான காவல்துறை அதிகாரியான சேதுபதி, கொடூரமாகக் கொலை செய்யப்படும் தீவிரமான காட்சிகளுடன் படம் ஆரம்பிக்கும். பிறகு கார் மெக்கானிக் ராஜா, கௌதமியுடன் செய்யும் ரொமான்ஸ் குறும்புகளுடன் நகரும். இன்னொரு டிராக்கில், தவறான புரிதல் காரணமாக அப்புவின் காதல் நொறுங்கும் சோகம் நடக்கும். தற்கொலைக்கு அப்பு முயலும் போது அவனுடைய தந்தை கொலைசெய்யப்பட்ட செய்தி கிடைக்கும்.
பழிவாங்குவதற்காக அப்பு கிளம்பும் போது அவனுடைய அதுவரையான முகம் மாறி தீவிரம் அடையும். அப்பு செய்யும் கொலைகளுக்கான பழி, ராஜாவின் மீது விழுவதால் ஜாலியான குழப்பங்கள் நடக்கும். இப்படி ஒரு கணம் கூட சுவாரஸ்யம் குன்றாத அளவிற்கு படம் நகர்ந்து கொண்டே இருந்ததால் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு தனது நடிப்புப் பயணத்தை ‘கிளாஸ்’, ‘மாஸ்’ என்று மாறி மாறி நடிக்கும் விதமாக கமல் மாற்றிக் கொண்டார். வித்தியாசமான படங்களைத் தரும் அதே வேளையில், ஜனரஞ்சக படங்களிலும் நடித்தால்தான் தனது மார்க்கெட் நிலையாக இருக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. எதிர்முனை போட்டியாளராக இருந்த ரஜினியின் சந்தை உயர்ந்து கொண்டே இருந்ததும் அவருக்கு நெருக்கடியைத் தந்திருக்கும். ‘நாயகன்’ திரைப்படம் வேறு கமல் படத்தின் தரத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல்லை அமைத்திருந்தது. அதையும் வேறு தக்க வைத்தாக வேண்டும்.
இப்படியான சூழலில், ‘சூரசம்ஹாரம்’, ‘உன்னால் முடியும் தம்பி’ போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு ஒரு பிரமாண்டமான வெற்றியைத் தர வேண்டிய சூழல் கமலுக்கு நேர்ந்தது. எனவே ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைக்கதையை மாய்ந்து மாய்ந்து செதுக்கினார். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கலைஞர்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். இந்தப் படத்தின் USP என்பது ‘அப்பு’ கேரக்ட்டர் என்கிற வணிக சூட்சுமம் அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே இந்தப் பாத்திரம் தொடர்பான உருவாக்கக் காட்சிகள் மிக ரகசியமாக வைக்கப்பட்டன.

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் தலைப்பு கூட உயரம் மற்றும் உயரக்குறைவு கலந்த எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்டது. சேதுபதி பாத்திரத்தில் மலையாள நடிகர் பிரேம் நசீரை நடிக்க வைக்க விரும்பினார் கமல். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக பிரேம் நசீரால் நடிக்க இயலவில்லை. எனவே அந்தப் பாத்திரத்தையும் தானே ஏற்றுக் கொண்டார். எனவே இந்தப் படத்தில் மூன்று கமல் பாத்திரங்கள் இருந்தன. சேதுபதி பாத்திரத்தின் கெட்அப், அறுபதுகளில் இருந்த காவல்துறை சீருடையுடன் இருந்தது.
ரகளையாக ஆரம்பித்த கமல் + கிரேஸி மோகன் கூட்டணி
இந்தப் படத்தின் வசனத்தை முதலில் இயக்குநர் மௌலி எழுதுவதாக இருந்தது. அது சாத்தியப்படாமல் போகவே கிரேஸி மோகனை அழைத்தார் கமல். இந்தக் கூட்டணி பிறகு பல மறக்க முடியாத வெற்றித் திரைப்படங்களைத் தந்து பார்வையாளர்களை மகிழ்வித்தது. ‘அபூர்வ சகோதரர்களின்’ படத்தின் சிறப்பிற்கு கிரேஸி மோகனின் வசனங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பல இடங்களில் கூர்மையான நகைச்சுவையோடு இருந்த வசனம், அதே சமயத்தில் ஆழமான உணர்ச்சிகரத்துடனும் அமைந்திருந்தது.

பெற்ற அம்மாவே தன் உடற்குறையைப் பற்றிப் பேசி விட்டதைக் கேட்டு இடிந்து போய் விடும் அப்பு “ஊருக்குத்தான் நான் கோமாளி… உனக்கு நான் மகன்… ஊர் சிரிக்கறதைப் பத்தி எனக்குக் கவலையில்ல” என்று சொல்வது போன்ற இடங்களில் வசனங்கள் காட்சியுடன் கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. “ஏண்டா… சின்ன சைஸா இருந்திக்கிட்டு நீயா என்னை சாகடிக்கப் போறே?” என்று வில்லன்களில் ஒருவர் எகத்தாளமாக கேட்கும் போது “திருக்குறள் கூட இரண்டே அடிதான். அதுல எவ்ளோ விஷயம் இருக்கு?” என்று அப்பு பேசும் பதில் வசனம் ‘நச்’சென்று இருந்தது. நான்கு வில்லன்களையும் அப்பு பழிவாங்கும் விதமும், அப்போது பேசும் வசனங்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தன.
‘நான் பார்த்து வளர்ந்த பொண்ணுடா அது’ என்று அம்மா சொல்ல, ‘அப்ப நான் மட்டும் ஏம்மா வளரலை?’ என்று சுயபகடியோடு கேட்பான் அப்பு. அதில் சோகமும் கலந்திருக்கும். ‘எனக்கு வயது 26’ என்று சாட்சிக் கையெழுத்து போடும் போது அப்பு சொல்ல, ‘எது… 26-க்குப் பிறகு வருமே அந்த 27-ஆ?’ என்று பதிவாளர் கேட்பது, அக்மார்க் கிரேசி பிராண்ட் நகைச்சுவை.

ராஜாவும் அப்புவும் ஒரு டிராக்கில் கலக்கிக் கொண்டிருப்பார்கள் என்றால் ஜனகராஜூம் ஆர்.எஸ்.சிவாஜியும் மற்றொரு டிராக்கில் ரகளை செய்து கொண்டிருப்பார்கள். இன்ஸ்பெக்டரான ஜனகராஜ் செய்யும் கோணங்கித்தனமான இன்ஸ்வெஸ்டிகேஷனையெல்லாம் மிகையாகப் புகழ்ந்து ‘நீங்க எங்கயோ போயிட்டீங்க சார்’ என்று ஆர்.எஸ்.சிவாஜி சொல்வதும் ‘டியூட்டில சென்டிமென்ட் கூடாது’ என்று ஜனகராஜ் அதை அடக்கமாக ஏற்றுக் கொள்வதும் ரசிக்கத்தக்க நகைச்சுவை.
சர்க்கஸ் புலியை வைத்து வில்லன்களில் ஒருவரான நாசரை அப்பு கொன்று விட, புலி வேஷம் கட்டிக் கொண்டு ‘அண்ணாத்த ஆடறார்’ என்று ஆடிக் கொண்டிருக்கும் ராஜாவின் மீது ஜனகராஜிற்கு சந்தேகம் வரும். ‘கொன்னுட்டியடா பாவி’ என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, தான் புலி வேஷத்தில் நன்றாக ஆடியதைத்தான் பாராட்டுகிறார் என்று நினைத்துக் கொண்டு ‘நல்லாயிருந்துச்சா சார்’ என்று ராஜா கேட்பதெல்லாம் வெடித்து சிரிக்க வைக்கும் காமெடி.
தான் எழுதும் வசனங்களில் அடுக்கடுக்காக பல நுட்பமான நகைச்சுவை வரிகளை ஒளித்து வைப்பார் கிரேசி மோகன். முதல் முறை பார்க்கும் போது நாம் தவறவிட்ட வசனங்களை, அடுத்தடுத்த முறைகளில் பார்க்கும் போதுதான் கவனித்து பிரமிக்க முடியும்.
தனது நேர்காணல்களில் பாலசந்தரையும் நாகேஷையும் பற்றி குறிப்பிடாமல் இருக்கவே மாட்டார் கமல். இந்தப் படத்தில் நாகேஷை வில்லனாக நடிக்க வைக்க விரும்பினார். ஒரு நகைச்சுவை நடிகனைப் போய் வில்லனாக மக்கள் ஏற்பார்களா என்று நாகேஷிற்கு ஏற்பட்ட இயல்பான தயக்கத்தைப் போக்கி நடிக்க வைத்தார்கள். கொடூரமான வில்லனாக நாகேஷ் நடித்தாலும், அவருக்குள் உறைந்திருந்த நகைச்சுவை அவ்வப்போது பளிச்சிடும். ராஜாவைப் பிடித்துக் கொண்டு வரச் சொல்லி அடியாட்களை அனுப்புவார் நாகேஷ்.
அவர்கள் தவறுதலாக ‘அப்பு’வை அழைத்து வரும்போது, ‘இவனா ராஜா… மீதி எங்கேடா?’ என்று டைமிங்கில் நாகேஷ் அடித்த வசனத்தை அவ்வப்போது சொல்லிச் சிலாகிப்பார் கமல். இதர வில்லன்களாக நாசர், ஜெய்சங்கர், டெல்லி கணேஷ் ஆகிய மூவரும் நடித்திருந்தார்கள்.

ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல…
‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் சிறப்பிற்கு இளையராஜாவின் அட்டகாசமான பாடல்களும் பின்னணி இசையும் உறுதுணையாக அமைந்திருந்தன. ‘என் படங்களை விடவும் கமல் படங்களுக்குத்தான் நல்ல நல்ல பாட்டா ராஜா போட்டிருக்கார்’ என்று ரஜினி ஒரு மேடையில் ஜாலியாக சொல்லுமளவிற்கு, கமல் படம் என்றாலே ராஜாவின் ஹார்மோனியத்திற்கு தனியான குஷி வந்துவிடும். “எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ திரைப்படத்தில் வந்த, ‘நான் பார்த்ததிலே’ பாடல் மாதிரி ஒன்று வேண்டும்” என்று கமல் கேட்க, அந்த மெட்டை தனது பாணியில் மாற்றி ராஜா இசையமைத்த பாடல்தான் ‘புது மாப்பிள்ளைக்கு… நல்ல நேரமடா…’. இந்த ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களும் ‘ஹிட்’. கமலுக்குத் திருப்தி ஏற்படாததால், வாலி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு எழுதிய பாடல் ‘உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’!
நாயகன் போன்ற கிளாஸான படங்களுக்குப் பிரத்யேகமான அழகியல் பாணியைப் பயன்படுத்திய பி.சி.ஸ்ரீராம், அபூர்வ சகோதரர்கள் போன்ற ஜனரஞ்சகமான படங்களுக்கு வேறு வகையான ஸ்டைலைப் பின்பற்றி பல காட்சிகளில் அசத்தியிருந்தார். அப்புவின் பாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் காட்டியிருந்ததில் ஒளிப்பதிவிற்கும் ஒரு முக்கிய பங்கிருந்தது.
கமல்ஹாசனின் ஆஸ்தான கூட்டணியில் தவறாது இடம்பிடித்த இயக்குநர்களில் ஒருவர் சிங்கீதம் சீனிவாச ராவ். இந்தக் கூட்டணி தந்த பல மறக்க முடியாத படங்களில் ஒன்று ‘அபூர்வ சகோதரர்கள்’. ஆரம்பம் முதல் இறுதி வரை துளிகூட சுவாரஸ்யம் குன்றாத அளவில் இயக்கியிருந்தார். குறிப்பாக அப்புவிற்கும் ராஜாவிற்கும் சமமான இடத்தை அளித்தது, இவரின் திறமையான இயக்கத்திற்குச் சான்று.

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி உயரத்தில் நிற்பது ‘அப்பு’ பாத்திரம்தான். காதல், குறும்பு, சோகம், நெகிழ்ச்சி. வீரம், புத்திசாலித்தனம் என்று பல்வேறு கலவையான குணாதிசயங்களுடன் அந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. கமல் இதை மிகவும் திறமையாகக் கையாண்டிருந்தார். தன் உடற்குறையைப் பற்றி அம்மாவே சொல்லி விடுவது, கோமாளி முகமூடியைப் போட்டுக் கொண்டு அழுவது, தனக்குத்தான் திருமணம் என்று நினைத்து சென்றுவிட்டு பிறகு சாட்சிக் கையெழுத்திடும் போது மற்றவர்கள் செய்யும் கிண்டல்களை மௌன அழுகையுடன் எதிர்கொள்வது, நான்கு வில்லன்களையும் எகத்தாளமாக எதிர்கொள்வது என்று ‘அப்பு’ பாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றிக் காட்டியிருந்தார் கமல்.
ஓர் உயர்தர ஜனரஞ்சகமான சினிமாவின் அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் வெளிவந்த சமயத்தில் பிரமாண்டமான வணிக வெற்றியைப் பெற்றது.
சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் கமல். கமலுடைய சில சிறந்த திரைப்படங்களை எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்க முடியும். அந்த வரிசையில் தவிர்க்கவே முடியாத படங்களில் ஒன்று ‘அபூர்வ சகோதரர்கள்’.