பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா… பாஜக டுமீலாக இதுதான் வழி… ரூட்டை மாற்றுமா எதிர்க்கட்சிகள்?

பிரசாந்த் கிஷோர் சொன்னா கரெக்டா தான்பா இருக்கும்… இப்படி பேசாத அரசியல் கட்சிகளே இந்தியாவில் இல்லை என்று சொல்லலாம். ஆனால் காலப்போக்கில் அப்படியே எதிர்நிலையில் திரும்பிய சம்பவங்களும் உண்டு. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தொடங்கி பஞ்சாபில் அமரிந்தர் சிங் வரை பலருக்கும் தேர்தல் வியூக வகுப்பு எடுத்திருக்கிறார். இதில் 90 சதவீதம் வெற்றி எனச் சொல்லலாம். இந்நிலையில் கடந்த ஆண்டு தனது ஐபேக் நிறுவனத்தில் இருந்து வெளியேறி மாநில அரசியலுக்கு திரும்பினார்.

பிகார் அரசியல் களம்

பிகார் மாநில அரசியலில் இளைஞர்களால் புது ரத்தம் பாய்ச்ச போகிறேன் என்று ’ஜன் சூரஜ் யாத்ரா’ என்ற பெயரில் 6,000 கிலோமீட்டர் தூர நடைபயணம் மேற்கொண்டார். இதற்கு ஓரளவு ஆதரவும் கிடைத்தது. இதை சிறிய ஓய்விற்கு பின்னர் மீண்டும் தொடர்ந்துள்ளார். இதற்கிடையில் தேசிய அரசியலை உற்றுநோக்கி வந்த பிரசாந்த் கிஷோர், பாஜகவை வீழ்த்துவது எளிதல்ல என்று எதிர்க்கட்சிகள் வயிற்றில் புளியை கரைத்தார்.

பாஜகவின் அடுத்த தேசிய நகர்வு… இந்த 6 மாநிலங்களுக்கு குறி… மாறும் பெரிய தலைகள்!

எதிர்க்கட்சிகள் ஆலோசனை

இதையடுத்து எதிர்க்கட்சிகளின் பாட்னா ஆலோசனைக் கூட்டத்தை கவனித்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் மட்டும் போதாது. சரியான வியூகமும் அமைக்க வேண்டியது அவசியம். அதேசமயம் பாஜகவை எதிர்க்க வலுவான காரணம் தேவை. அதை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கும் வகையில் கொண்டு செல்ல வேண்டும். பாஜகவிற்கு எதிரான சூழலை உருவாக்கினால் மட்டுமே எதிர்க்கட்சிகள் வெற்றி என்பது சாத்தியம் என்று கூறினார்.

எமர்ஜென்சியும், ஜெயபிரகாஷ் நாராயணனும்

மேலும் பேசுகையில், எமர்ஜென்சி காரணமாக ஜனதா கட்சி உருவானது. ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில் மாபெரும் கூட்டணி அமைந்தது. இது வெற்றியும் பெற்றது. வி.பி.சிங் ஆட்சியை கைப்பற்ற போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு பெரிதும் கைகொடுத்தது. அதுபோல தற்போதைய அரசியல் களத்தில் பாஜகவை எதிர்க்க வலுவான காரணம் தேவைப்படுகிறது.

எண் கணித அரசியல்

இல்லையெனில் வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான கூட்டணி வெற்றி பெறாது என்று கட் அண்ட் ரைட்டாக ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனை எதிர்க்கட்சிகள் செவி கொடுத்து கேட்குமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. முன்னதாக
காங்கிரஸ்
கட்சியில் பிரசாந்த் கிஷோரை இணைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

காங்கிரஸ் எடுத்த முயற்சி

தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கவும் கட்சி தலைமை முன்வந்தது. இதையடுத்து காங்கிரஸில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களை தயாரித்தார். ஆனால் கடைசி நேரத்தில் பிரசாந்த் கிஷோர் பின் வாங்கிக் கொண்டார். இதற்கு காங்கிரஸின் மேல்மட்ட தலைவர்கள் மத்தியில் எழுந்த அதிருப்தி ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

தற்போது பிகார் மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த காய் நகர்த்தி வருகிறார். இத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகள் சரியான பாதையில் தங்கள் கூட்டணி வியூகத்தை முன்னெடுப்பார்களா? இல்லை சொதப்பி விடுவார்களா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.