இம்பால்: மணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாலில் உள்ள பள்ளி ஒன்றின் வளாகத்துக்கு வெளியே பெண் ஒருவர், அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு அடுத்த நாள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால், சம்பவம் நடந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இறந்த பெண் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். காங்போக்பி மாவட்டத்தில் மாபாவோ மற்றும் அவாங் செக்மி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு ஆயுத குழுக்களுக்கு இடையிலான மோதலை பாதுகாப்புப் படையினர் முறியடித்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மற்றொரு வன்முறைச் சம்பவத்தில், போலீசாரின் ஆயுதக் கிடங்கிலிருந்து ஆயுதங்களைத் திருடும் கலவரக்கார்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தவுபால் மாவட்டத்தில் உள்ள இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (ஐஆர்பி) பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதக் கிடங்கை பாதுகாக்கும் பணியில் வங்பாலில் இருந்த 3-வது ஐஆர்பி பிரிவு இந்த முயற்சியை முறியடித்ததைத் தொடர்ந்து, அதன் பணியாளரின் வீடு தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மணிப்பூர் அரசு மாநிலம் முழுவதும் ஜூலை 10-ம் தேதி வரை மேலும் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் முதல்முதலாக மே 3-ம் தேதி, வெறுப்பு பேச்சு, தவறான தகவல்களைப் பரப்பும் படங்கள், வீடியோக்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் இணைய சேவை தடை செய்து உத்தரவிடப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 53 சதவீதம் இருக்கும் மைத்தி சமூக மக்களை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.