இமாச்சலப் பிரதேசத்தில் முகமூடி மனிதன் ஒருவன் கையில் வெடிகுண்டுடன் தனியார் வங்கிக்குள் நுழைந்து பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவமானது, இமாச்சலப் பிரதேசத்தின் ஹர்சாவா கிராமத்தில் அமைந்திருக்கும் தனியார் வங்கியான யெஸ் பேங்கில் (yes bank) இன்று நிகழ்ந்திருக்கிறது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக போலீஸ் கூறிய தகவலின்படி, முகமூடி அணிந்த நபர் ஒருவர் கையில் வெடிகுண்டுடன் வங்கிக்குள் நுழைந்து, பணம் தருமாறு ஊழியர்களிடம் வெடிகுண்டைக் காட்டி மிரட்டியிருக்கிறார். அப்போது வங்கி ஊழியர் ஒருவர் 1.25 லட்ச ரூபாயை முகமூடி நபரிடம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் இன்னும் அதிகப் பணம் வேண்டுமென்று, அதை வாங்க மறுத்த முகமூடி நபர், நேராக வங்கி காசாளர் அறைக்குச் சென்று அங்கிருந்த பணத்தை தன்னுடைய பையில் எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் வங்கியின் பிரதான வாயிலை பூட்டு போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றார். இதுவரை வங்கியில் கொள்ளையடித்த அந்த முகமூடி நபர் யார் என்பது குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. போலீஸும் அந்த முகமூடி கொள்ளையனைக் கண்டுபிடிக்க தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகிறது.

இது குறித்துப் பேசிய ஃபதேபூர் காவல் நிலைய போலீஸ் அதிகாரி கிருஷ்ணகாந்த், “இந்த சம்பவத்தின்போது வங்கியில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. கையிலிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்துவிடுவேன் என்று ஊழியர்களை மிரட்டிய முகமூடி நபர் இறுதியில் 24 லட்சம் ரூபாய் பணத்துடன் வங்கியிலிருந்து தப்பிவிட்டான். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வங்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துவருகிறோம்” என்றார்.