காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் பாடலுக்கு எழுந்து வரும் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
சீமான் பேசுகையில், கட்சி ஆரம்பித்தது முதல் தனித்துத்தான் போட்டியிட்டு வருகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம் என்றார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கக்கூடாது. தம்பி அண்ணாமலையிடம் கேட்கவேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஒரு மீனவர் தாக்கப்பட்டாரா என வீரவசனம் பேசிய அண்ணாமலையிடம் இதைக் கேளுங்கள்” என்றார்.
மேலும் பேசிய சீமான், “அண்ணாமலை பேச வேண்டியதெல்லாம் ஆளுநர் பேசி விடுவதால் யார் பாஜக தலைவர் என்பதில் அண்ணாமலைக்கு குழப்பம். அதனால், ஆளுநர் தன்னை ஓவர்டேக் செய்துவிடுகிறார் என்பதால் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது எனச் சொல்கிறார். ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களும் அரசியல் பேச வேண்டும். அரசியல் என்பது வாழ்வியல். மனித உடலில் இருந்து உயிரப் பிரிப்பதும் மனித வாழ்வில் இருந்து அரசியலைப் பிரிப்பதும் ஒன்று. அரசியல் இன்றி ஆளுநர் ஆகியிருக்க முடியுமா?” எனத் தெரிவித்தார்.
மக்களால் தேர்வு எம்.பியாக செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ய நீங்கள் யார்? ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது. அவர் எம்.பியாக இருப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது மக்கள் தான். ராகுல் காந்தியை போட்டியாளர் என்றே கருதவில்லை எனக் கூறும் பாஜக ஏன் அவர் மீது பயந்து இப்படி வேலை செய்கிறது? எனத் தெரிவித்தார்.
மேலும், விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம். இதற்கு முன்பாக, மது குடிக்கும் காட்சிகளில், சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது இல்லையா? ஊத்திக்க ஊத்திக்க என்றெல்லாம் தலைவா படத்தில் பாட்டு பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் என்ன செய்தீர்கள்? லியோ படத்தில் அவர் பாடியதில் வன்முறை வந்துவிட்டதா? கட்சி ஆரம்பிக்க போகிறார் என்றவுடன் குற்றமாகத் தெரிகிறதா?
மது ஆலைகளை இரு கட்சியினரும் வைத்திருக்கிறார்கள். அரசு கடையைத் திறந்து மது விற்கிறது. அதை விமர்சிக்க துப்பு இருக்கிறதா? ஒரு படத்தில் பாட்டு வந்ததற்காக இதைப் பேச என்ன இருக்கிறது? அதை வெட்டி தூக்கிவிட்டால் கடையை மூடிவிடுவார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.