பெங்களூரு: கர்நாடக தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000, மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசம், பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 மாதந்தோறும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த நிலையில் மகளிருக்கு பேருந்தில் இலவசப் பயணம், வீடுகளுக்கு மாதம்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம், மாதம்தோறும் 10 கிலோ அரிசி இலவசம் ஆகிய 3 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இல்லத்தரசிகள் மற்றும் பட்டதாரிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: கர்நாடக அரசின் இலவச திட்டங்களை எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் விமர்சித்து வருகின்றன. மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை தீட்டி வருகிறது. தேர்தல் அறிக்கையில் அளித்த 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற ரூ. 52 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் மின்னணு துறையை மேம்படுத்த காடுகோடியில் 100 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். விண்வெளி தொழில் துறையில் சிறு மற்றும் நடுத்தர தொழிலை மேம்படுத்தும் வகையில் தேவனஹள்ளியில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.
பெங்களூருவில் போக்குவரத்து மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, பொது சுகாதாரம், மின் வசதி, நீர் பாதுகாப்பு, வெள்ளமேலாண்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அறிவியல்ரீதியாக தீர்வுகண்டு, பெங்களூருவை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சித்த ராமையா அறிவித்தார்.
முதல்வர் சித்தராமையா கடந்த 1994-ம் ஆண்டு மஜத ஆட்சியில் நிதி அமைச்சராக முதல் முறை யாக பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் பிறகு 14-வது முறையாக பட்ஜெட் செய்து சாதனை படைத்துள்ளார்.