சினிமா தியேட்டர்கள் – தின்பண்டங்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு?

சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென சமீபத்தில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் அந்த டிக்கெட் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தியும், உள்ளாட்சி வரிகளை முழுவதுமாக நீக்க வேண்டும், அதன் மூலம் டிக்கெட் கட்டணத்தை குறைத்துவிடலாம் என்றும் தெரிவித்தது.

சினிமா தியேட்டர்களில் தின்பண்டங்கள் மிக அதிக விலைக்கு விற்கப்படுவது பல தியேட்டர்களில் உள்ளது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பாப்கார்ன் ரூ.500 வரையிலும் விற்கப்படுகிறது. மற்ற உணவுப் பொருட்களின் விலைகளும் வெளியில் விற்பதை விட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிகம்தான். தண்ணீர் பாட்டில்கள் கூட அதிக விலைக்கே விற்கப்படுகின்றன.

இந்நிலையில் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் தின்பண்டங்களுக்கான தற்போதைய ஜிஎஸ்டி வரியான 18 சதவீதத்தை 5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுதினம் ஜுலை 15ம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு வந்த பிறகாவது தின்பண்டங்களின் விலை குறையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மாறாக வரி அல்லாத விலையை தியேட்டர்கள் ஏற்றவும் வாய்ப்புள்ளது. எனவே, தின்பண்டங்களுக்கான விற்பனை விலையை ஒரு வரம்புடன் அரசு நிர்ணயிக்க வேண்டுமென்று தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்க்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.