'தேர்தல் நெருங்குதே' ராஜஸ்தானில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்.. தொடங்கி வைத்தார் மோடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சுமார் 24 ஆயிரம் கோடி மதிப்பு மிக்க பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் நாட்டை குழிதோண்டி புதைப்பதாகவும் ஆட்சியில் இருந்து சென்றால் நாட்டை இழிவு படுத்துவதாகவும் விமர்சித்தார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இதனால், அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கர்நாடகாவில் பெற்ற வெற்றியுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

முதல்வர் அசோக் கெலாட்டிற்கும் சச்சின் பைலட்டிற்கும் இடையே இருக்கும் மோதல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருந்தாலும் அதை சரி கட்டும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. மறுமுனையில் பாஜக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தான், ராஜஸ்தானுக்கு நேற்று பிரதமர் மோடி சென்றார். ராஜஸ்தானில் சுமார் 24 ஆயிரம் கோடி மதிப்பு மிக்க பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

குறிப்பாக 500 கி.மீட்டர் தொலைவு கொண்ட அமிர்தசரஸ்-ஜாம்நகர் இடையேயன மேம்படுத்தப்பட்ட விரைவுச் சாலை உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். ஆட்சியில் இருந்தால் நாட்டை குழிதோண்டி புதைப்பதாகவும் ஆட்சியில் இருந்து சென்றால் நாட்டை இழிவு படுத்துவதாகவும் விமர்சித்தார்.

மேலும் பிரதமர் மோடி கூறியதாவது:- வேகமாக வளர்ச்சி அடையும் ஆற்றல் கொண்ட மாநிலம் ராஜஸ்தான். அதன் காரணமாகவே இங்கு சாதனை படைக்கும் விதமாக இங்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கு அளப்பறிய ஆற்றல் உள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ரயில்வே மேம்பாடுக்காக சராசரியாக ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே மேம்பாடுக்காக 10 ஆயிரம் கோடி நிதியை நாங்கள் ஒதுக்கி வருகிறோம்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அவர்களுக்குள் தான் சண்டை போட்டு வருகிறார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவருடைய காலை பிடித்து வாரி விட்டு கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் டெல்லியில் இருந்து ஜெய்பூருக்கு திட்டங்களை அனுப்புகிறோம். ஆனால், அவற்றை செயல்படுத்துவதில்லை . ராஜஸ்தானின் பிரச்சினைகளை தீர்க்கவோ.. மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவோ காங்கிரஸ் எதையுமே செய்யவில்லை.

ஒவ்வொரு வீட்டிற்கும் பயன்களை அளிக்கும் பாஜகவின் திட்டங்களினால் காங்கிரஸ் கட்சி கலக்கம் அட்டைந்துள்ளது. மாநிலத்திற்கு தீங்கை மட்டுமே காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. ராஜஸ்தானில் வானிலை வெப்பம் மட்டும் அதிகரிக்கவில்லை. கங்கிரஸ் அரசுக்கு எதிரான மக்களின் வெப்பமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.