நீலகிரி மாவட்டம் , ஊட்டி அருகில் உள்ள தொட்டபெட்டா பகுதியில் அரசு தேயிலை பூங்கா அமைந்துள்ளது. தேயிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தேயிலை விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும் தோட்டக்கலைத்துறை மூலம் இந்த தேயிலை பூங்கா செயல்பட்டு வருகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள தேயிலைப் பூங்காவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

இந்த தேயிலை பூங்காவில் உள்ள நாற்றாங்கால்களில் அழகுத்தாவரங்கள், மூலிகைத் தாவரங்கள் மற்றும் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேயிலை விவசாயிகளுக்கு தரமான நாற்றுகளை சரியான விலையில் வழங்கும் நோக்கில் பதியன் முறையில் 15 ஆயிரம் தேயிலை நாற்றுக்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த தோட்டக்கலைத்துறையினர் , ” குளிர்ந்த காலநிலையைக் கொண்டுள்ள இந்த தேயிலை பூங்காவில் நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கு ஏற்றச் சூழலாக இருக்கிறது. சுமார் 3 லட்சம் மூலிகை மற்றும் அழகு தாவரங்கள் விற்பனைக்கு தற்போது தயார் நிலையில் உள்ளன.

இது தவிர, அனைத்து காலநிலைகளை தாங்கி வளரும் உபாசி- 9 ரக தேயிலை நாற்றுகளை பதியன் முறையில் உற்பத்தி செய்து வருகிறோம். இன்னும் சில மாதங்களில் 15 தேயிலை நாற்றுக்களை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய இருக்கிறோம் ” என்றனர்.