சூடான்: ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே வெடித்த மோதலில் பலர் கொல்லப்பட்டு வரும் நிலையில், வான்வழித் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதை தொடர்ந்து ராணுவ தளபதி ஜெனரல் ஃபதக் அல் பர்ஹான் தலைமையில் அந்நாட்டில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் துணைத் தலைவராக துணை ராணுவப் படை தளபதி ஜெனரல் முஹம்மது ஹம்தான் டகலோ இயங்கி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்தது. 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணாக்கானோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்திலேயே அதிபர் மாளிகை, விமான நிலையம், மருத்துவமனைகளை துணை ராணுவம் கைப்பற்றியது.
இந்த உள்நாட்டு போரின் காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் தாக்குதல்களில் தகர்க்கப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை இழந்து இருக்கிறார்கள். வீடுகளையும், உறவுகளையும் இழந்து வாடும் சூடான் மக்களுக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றனர்.
குறிப்பாக போர் தொடங்கியவுடன் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாப்பாடு, குடிநீர், மருத்துவ வசதி இல்லாமல் தவித்த இந்திய மக்களை மீட்க மத்திய அரசு ஆபரேசன் காவேரி திட்டத்தை செயல்படுத்தியது. இந்த நிலையில் அங்கு தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசும் உதவும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 247 தமிழர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டார்கள்.

தொடர்ந்து மோதல் நடைபெற்று வரும் நிலையில் சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைக்கும் இடையே அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, தற்காலிகமாக சண்டை நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால் அதையும் மீறி இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், சூடான் தலைநகர் கார்டூம் அருகே உள்ள ஓம்தூர்மன் நகரில் குடியிருப்பு பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்கள். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதேபோல் நடந்த கடந்த மாதம் சூடானில் நடந்த வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.