இந்தியா முழுவதும் கடந்து சில நாள்களாக தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தக்காளி விலையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மலிவு விலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை மலிவு விலை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து குறைந்து கொண்டே வந்ததால், இன்று மீண்டும் விலை உயர்ந்திருக்கிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றைய தினம் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.10 அதிகரித்து, ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வருவாய் என்பது பெரிய விஷயமல்ல. இன்று அன்றாடம் கூலி தொழிலாளிகள்கூட ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.
மக்களிடம் பணப்பழக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். அதனால் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதால், பணப்புழக்கம் இருக்கிறது. எனவே, விலைவாசி உயர்கிற நேரத்தில் அது ஒரு பெரிய சிரமமாக மக்களுக்குத் தெரியவில்லை. வருவாய் அதிகமாக இருப்பதால் அதை வைத்து சரி செய்து கொள்கிறார்கள்.

தக்காளி சீசனுக்கு ஏற்றார்போல் விளையும் பொருள். பத்து நாள்கள்தான் சர்வசாதாரணமாக தக்காளியின் விலை ஏற்றம் இறக்கமாக இருக்கும். அதையும் கட்டுப்படுத்துவதற்காகத்தான் ரேஷன் கடை மூலமாக தக்காளி விற்பனை செய்துவருகிறோம்” என்றார்.