மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக உள்ளது… விலைவாசி உயர்வால் சிரமப்படவில்லை… அமைச்சர் சர்ச்சை பேச்சு!

தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கன்னாபின்னாவென உயர்ந்துள்ளது. தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய் மற்ற காய்கறிகளின் விலை ஒரு பக்கம் உயர்ந்து வரும் நிலையில் மறுபக்கம் மளிகை பொருட்களின் விலையும் மளமளவென உயர்ந்து வருகிறது.

உச்சத்தை தொட்ட தக்காளி விலையால், மக்கள் தக்காளியை வாங்கவே யோசித்து வருகின்றனர். விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் விலைவாசி உயர்வு குறித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான், இரண்டரை லட்சம் ரூபாய் வருமான என்பது பெரிய விஷயமே இல்லை. சாதாரண கூலி தொழிலாளி கூட நாள்தோறும் 1000 ரூபாய் சம்பாதிக்கிறார். மக்கள் மத்தியிலும் ஏழைகள் மத்தியிலும் பணப்புழக்கத்தை கொண்டு வந்துவிட்டோம்.

எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கிறது. வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது. கட்டுமானப் பணிகள் தாராளமாக நடைபெறுகிறது. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் உள்ளது. இதனால் விலை வாசி உயர்வால் மக்கள் சிரமப்படவில்லை. வருவாயும் கூடுதல் ஆவதால் சரியாக உள்ளது என்றார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் விலைவாசி உயர்வால் மக்கள் சிரமப்படவில்லை என கூறியிருப்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பேசிய அவர், தக்காளி விலை உயர்வு சீசனுக்கு வரும் ஒன்றும் தான். 10 நாட்கள் ஏற்றம் இறக்கம் இருக்கும். இது சர்வ சாதாரணமானதுதான். அதையும் கட்டுப்படுத்ததான் அரசு ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.