சென்னை: சாக்லேட் பாய், அமுல் பேபி போல இருந்த அரவிந்த் சாமியை அன்றைய இளம் பெண்களுக்கு பிடித்து போக, பல கல்லூரி பெண்களின் புத்தகத்தில் அரவிந்த் சாமியின் பேப்பர் கட்டிங் இருக்கும்.
இப்படி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த அரவிந்த் சாமி தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்சனைகளால் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போனார்.
ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கும் நடிகர் அரவிந்த் சாமி குறித்து செய்யாறு பாலு பல சுவாரஸ்யமான தகவலை பேட்டியில் கூறியுள்ளார்.
கோடீஸ்வரரின் மகன்: அதில், நடிகர் அரவிந்த் பெரும் கோடீஸ்வரரின் மகன். சென்னை அண்ணாமேம்பாலத்தில் உள்ள அமெரிக்கன் எம்பன்சிக்கு அருகில் மிகவும் பிரம்மாண்ட பங்களாதான் அரவிந்த் சாமியின் வீடு. பெரிய பணக்காரரின் மகனாக இருந்த போதும், அரவிந்த் சாமியின் அப்பா பாக்கெட் மணியை அளந்துதான் தருவார். அரவிந்த் சாமிக்கு பணத் தேவை இருந்ததால், படித்துக்கொண்டே மாடலில் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருந்தார்.
தளபதி படத்தில் : இந்த நேரத்தில் தான், இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய தளபதி படத்திற்காக வட இந்தியாவில் இருந்து வரும் ஒரு கலெக்டர் கதாபாத்திரத்திற்காக ஒரு நடிகரை தேடிக் கொண்டிருந்தார். அப்போது தான் காபி விளம்பரத்தில் அரவிந்த்சாமியை பார்த்த மணிரத்னம். அவரை அழைத்து ரஜினிகாந்தின் தம்பியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார். அது பின்னர் அரவிந்த் சாமி, ரோஜா, பம்பாய் என பல ஹிட் படங்களில் நடித்தார்.
நடிப்புக்கு முழுக்கு : ரோஜா படத்தில் அரவிந்த் சாமியின் அழகை பார்த்து அப்போதைய இளம் பெண்கள் எல்லாம் கட்டுனா அரவிந்த் சாமியைத்தான் கட்டனும் என்று சொல்லும் அளவுக்கு பெண்களின் கனவு நாயகனாக இருந்தார். ஆனால், ராமராஜன் நடிக்க வேண்டிய கிராமத்து கதை அம்சம் கொண்ட தாலாட்டு படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றாலும் அரவிந்த் சாமி பீல்ட் அவுட் ஆனார். கதைத்தேர்வில் கோட்டை விட்டதால் படங்கள் தோல்வியை சந்தித்தன. அதன் பின்னர் அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டுக் கொண்டு ஒதுங்கி இருந்தார்.
விபத்தில் சிக்கினார்: இந்த நேரத்தில் தான், ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டதில் அவரால் நடக்க முடியாமல் போனது. இதற்காக அவர் பல மருந்துகளை எடுத்துக் கொண்டதால், குண்டாகி முடியெல்லாம் கொட்டி ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
தனி ஒருவனாக ஜெயித்தார்: தொடர்ந்து வந்த உருவகேலியால் மனஅழுத்தத்திற்கு உள்ளான அரவிந்த் சாமி ஜிம்மில் பல மணி நேரம் இருந்து உடற்பயிற்சி செய்து,கடுமையாக டயட் இருந்து தன்னை அப்படியே மாற்றிக் கொண்டார். அந்த நேரத்தில் தான் தனிஒருவன் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அரவிந்த் சாமிக்கு மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தது என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அரவிந்த் சாமி குறித்து பல சுவாரசியமான தகவலை பகிர்ந்தார்.