பிரேசலியா–பிரேசிலில் பெய்த கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வடகிழக்கு மாகாணமான பெர்னாம்கோ பகுதியில் உள்ள ரெசிப்பில் நகரில், நேற்று கனமழை பெய்தது. இதில் இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது, குடியிருப்புவாசிகள் பலர் துாங்கி கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் தவித்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டாலும், 14 பேர் பலியாகினர். மேலும், பலரை காணவில்லை. இவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்து, மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், நீதிமன்ற உத்தரவுப்படி 2010ல் மூடப்பட்டது. எனினும், பல குடும்பங்கள் சட்டவிரோதமாக அங்கு குடியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement