Ganja chocolate corrupting students: Will police take action? | மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா சாக்லெட்: போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா சாக்லெட் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

புதுச்சேரியில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு அடித்தளமாக கஞ்சா விளங்குகிறது. கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள், வேலைக்கு செல்லாமல் வாழ்க்கையை தொலைத்து, ரவுடிகளாக வலம் வருகின்றனர்.
நாள் முழுவதும் போதையில் மிதக்கும் இளைஞர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே கொடூரமான குற்றங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். குற்றங்களுக்கு ஆரம்ப புள்ளியாக திகழும் கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு, புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஜி.பி., சீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, கஞ்சா விற்பனை கும்பலை தேடி தேடி கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கி உள்ளனர். இந்நிலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையில் பெட்டிக்கடைகளில் கஞ்சா சாக்லெட் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
வடமாநிலங்கள் பலவற்றில் குடிசை தொழில்போல் கஞ்சா சாக்லெட்களை தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வரும் தொழிலாளர்கள் மொத்தமாக கஞ்சா சாக்லெட்களை வாங்கி வந்து, ஒரு பீஸ் சாக்லெட் ரூ.10க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை சாப்பிடுபவர்கள் 3 மணி நேரத்திற்கு போதையில் மிதக்கின்றனர். குறைந்த பணத்தில் அதிக போதை என்பதால், கஞ்சா சாக்லெட்டுக்கு அதிக கிராக்கி உள்ளது.
சாதாரண பெட்டிக்கடையில் மற்ற சாக்லெட்டுகளுடன் கஞ்சா சாக்லெட்டும் சர்வ சாதாரணமாக டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் கஞ்சா சாக்லெட் விற்பனையை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.