Mission: Impossible – Dead Reckoning Review: வில்லனே AI தான்.. மிஷன் இம்பாசிபிள் 7 விமர்சனம்!

Rating:
4.0/5
Star Cast: டாம் க்ரூஸ், ஹேலே அட்வெல், ரெபேகா ஃபெர்குசன்
Director: கிறிஸ்டோபர் மெக்குவாரி

இசை: லார்ன் பல்ஃப்

லாஸ் ஏஞ்சல்ஸ்: டாம் க்ரூஸ் பெரிய மலையில் இருந்து பைக் டைவிங் செய்த சாகச காட்சிகளை வெளியிட்டு கடந்த பல மாதங்களாக ப்ரமோஷன் செய்த மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் முதல் பாகம் வரும் ஜூலை 12 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அதன் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் இன்று இந்தியாவின் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் நடைபெற்றது.

இதுவரை டாம் க்ரூஸ் ரசிகர்களாக இல்லாதவர்களையும் இந்த படம் அவரது ரசிகராகவே மாற்றிவிடும். 60 வயதில் மனுஷன் என்னம்மா ஸ்டன்ட் செய்கிறாரு என வாய் பிளக்கும் அதே நேரத்தில் படத்தின் கதையும் வில்லனாக சொல்லும் அந்த AI தொழில்நுட்பமும் வலுவாக உள்ளதா? இல்லை உருட்டா இருக்கா என்பது குறித்த முழு விமர்சனத்தை இங்கே காணலாம் வாங்க..

மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் கதை: அவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த பூதத்தை எப்படி விளக்குக்குள் அடைத்து கதை சொன்னார்களோ அதே போன்ற ஒரு கதையைத் தான் டாம் க்ரூஸை வைத்து இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரி எந்தளவுக்கு பிரம்மாண்டமாக சொல்ல முடியுமோ அந்தளவுக்கு ஆக்‌ஷன் பேக்ட் கதைக்களத்துடன் சொல்லி இருக்கிறார்.

Entity எனச் சொல்லப்படும் AI தொழில்நுட்பம் எப்படி அதனை பாதுகாக்க வைத்திருக்கும் ஒரு ரகசிய நீர்மூழ்கி கப்பலையே வெடிக்கச் செய்து அதில் உள்ள ஆட்களை காலி செய்கிறது என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே காட்டி விடுகின்றனர். ஆனால், அந்த AI வில்லனை கட்டுப்படுத்தும் சக்தி இரு சாவி கொண்ட ஒரு காம்பினேஷன் சாவியால் மட்டுமே முடியும். அதற்கு டூப்ளிகேட் எல்லாம் செய்ய முடியாது என்றும் அந்த இரண்டு சாவியையும் ஒன்று சேர்க்க போராடும் கதையே முதல் பாகமாய் இருக்க, அந்த சாவியை வைத்து என்ன செய்வது? என்கிற கேள்வியுடன் இரண்டாம் பாகத்தை பார்த்து புரிந்துக் கொள்ளுங்கள் என படத்தை முடித்து விட்டனர்.

Mission: Impossible – Dead Reckoning Review in Tamil

படம் எப்படி இருக்கு?: 1996ம் ஆண்டு மே 22ம் தேதி மிஷன் இம்பாசிபிள் முதல் பாகம் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியானது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கழித்து அதன் 7வது பாகத்திலும் Ethan Hunt கதாபாத்திரத்தில் டாம் க்ரூஸ் தனது 61வது வயதிலும் உயிரை பணயம் வைத்து பல சாகச ஸ்டன்ட்டுகளை டூப் போடாமல் செய்து அசத்தி தியேட்டரில் படத்தை பார்க்க உட்கார்ந்த ரசிகர்களுக்கு டைட்டில் கார்டு போடுவதற்கு முன்பே டிக்கெட்டுக்கு கொடுத்த காசுக்கு திருப்தி செய்யும் விதமாக ஓபனிங்கே மிரட்டுகிறது.

அதன் பின்னர் AI இந்த உலகத்துக்கு எதிராக ஏகப்பட்ட உலகப் போர்களை தொடுக்கப் போகிறது. அதை தடுத்தாக வேண்டும் என்கிற மிஷன் வழக்கம் போல நம்ம ஹீரோவுக்கு வர அவர் ஒரு சாவியை வைத்துக் கொண்டு இன்னொரு சாவியை அடைய கிரேஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஹேலி அட்வெலை பின் தொடர்ந்து பல்பு வாங்கி தன்னிடம் இருந்த அந்த ஒரு சாவியை அந்த பெண்ணிடம் பறி கொடுக்கிறார்.

அதன் பின்னர் பெரிய வில்லன் கேப்ரியல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எசாய் மோரல்ஸ் ஆட்கள் அந்த பெண்ணை சுத்துப் போட்டு அந்த சாவியை அபகரிக்க நினைக்க தன்னை ஏமாற்றிய பெண்ணின் உயிரை காப்பாற்ற ஒரு நானோ கார் போன்ற டப்பா காரை வைத்துக் கொண்டு இடைவேளைக்கு முன்பாக செய்யும் 15 நிமிடத்திற்கும் மேலான நீண்ட ஸ்டன்ட் காட்சி ஆக்‌ஷனை விட காமெடியில் பட்டையைக் கிளப்பி வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுகிறது.

Mission: Impossible – Dead Reckoning Review in Tamil

பிவிஆர் பலாஸோவில் படம் பார்த்தாலும் டாம் க்ரூஸ் என்ட்ரிக்கே விசில் அடிக்கும் கூட்டம் அந்த காட்சிக்கு தியேட்டரே அதிரும் அளவுக்கு சிரித்து முடித்தது. இடைவேளையே ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டது போல உள்ளது என நினைக்கும் போதே அப்போ அந்த கிளைமேக்ஸ் எப்படி இருக்கும் என்கிற எண்ணம் தொற்றிக் கொள்கிறது.

புது ஹீரோயின் வந்த உடனே பழைய ஹீரோயினான லிசா ஃபாஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரெபேக்கா ஃபெர்குஸனை வில்லன் கேப்ரியல் கையால் போட்டுத் தள்ளி விடுகின்றனர்.

தனது காதலி மறைவால் ஹீரோ உருகும் காட்சிகள் லேசாக எமோஷனல் வேண்டுமா எமோஷனல் இருக்கு என்பது போல வந்து செல்கிறது. தனது காதலியை போட்டுத் தள்ளிய வில்லனை ஹீரோ பழிவாங்கக் கூடாது அவன் இறந்து விட்டால் AI தனது ஆட்டத்தையே மாற்றிவிடும். அந்த ஓடும் ரயிலில் இருந்து எப்படியாவது அந்த இரண்டு சாவியை கைப்பற்ற வேண்டும் என ஹீரோவின் கூட்டாளியான விங் ரமேஸ் எச்சரித்து அனுப்புகிறார்.

கடைசியில் அந்த டிரெய்னை போட்ட பிளான் படி பிடிக்க முடியாத டாம் க்ரூஸ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த கிளைமேக்ஸ் சாகசத்தை எப்படி நிகழ்த்துகிறார். இறுதியில் வில்லனை முடித்துக் கட்டினாரா? இல்லை? அடுத்த பாகத்தில் அவருக்கு இருக்கும் சவால்கள் என்ன என்ன? என்பது போல செம ட்விஸ்ட் வைத்து இந்த படத்தை முடித்துள்ளனர்.

Mission: Impossible – Dead Reckoning Review in Tamil

பிளஸ்: பக்கா ஐமேக்ஸ் மெட்டீரியல் படமாக இந்த மிஷன் இம்பாசிபிள் வெளியாகி உள்ளது. அதே ஜேம்ஸ் பாண்ட் டைப், சூப்பர் ஹீரோ டைப்பான உலகத்தையே காப்பாற்றும் பொறுப்பு தான் இந்த முறையும் நம்ம ஹீரோவுக்கு கொடுக்கப்படுகிறது. ஆக்‌ஷன் காட்சிகள், காமெடி காட்சிகள் என அனைத்துமே பக்காவாக வொர்க்கவுட் ஆகி உள்ளது.

ஒளிப்பதிவாளர் ஃபிரேசர் டக்கார்ட் டாம் க்ரூஸை விட அதிக சாகசங்களை செய்து சில காட்சிகளை எடுத்திருப்பார் போல கேமரா வொர்க் சும்மா தெறியாக இருக்கு.. அதிலும் 61 வயது நபரை இப்படியா தலை தெறிக்க ஓட விடுவீங்க என்பது போல காட்சிகளும் கேமராக்களும் ஒரு செகண்ட் கூட ரசிகர்களை சோர்வடைய விடவில்லை. டாம் க்ரூஸ் கூடவே நாமும் செல்வது போன்ற பிரமையை AI வைத்தே இன்சர்ட் செய்து விட்டது போல இருந்தது. லார்ன் பல்ஃப் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். சிஜிஒ வொர்க் எல்லாம் ஆதிபுருஷ் டீம் இந்த டீமை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும் என்றே சொல்லத் தூண்டும் வகையில் டாப் கிளாஸ்.

Mission: Impossible – Dead Reckoning Review in Tamil

மைனஸ்: ஜேம்ஸ் கேமரூன் எப்படி ரோபோக்கள் எல்லாம் வில்லனாகி மனித குலத்தையே அழித்து விடும் என்று டெர்மினேட்டர் படங்களை எடுத்தாரோ, அதே போலத்தான் இந்த படத்தின் கதையில் ஏஐ வில்லனை அறிமுகப்படுத்துகின்றனர். ஆனால், முதல் பாதியில் வந்த அந்த ஒரு சீனை தாண்டி ஏஐ படத்தில் பெரிதாக எதையுமே அதுவும் ஹீரோவுக்கு எதிராக எதையும் செய்தது போல தெரியவில்லை என்பது பெரிய குறையாகவே பார்க்கப்படுகிறது.

இரண்டாம் பாகத்தில் ஒரு வேளை அதன் கோரத் தாண்டவத்தை காட்டினால் தான் இந்த படத்துக்கு நியாயம் சேர்க்கும் என்று தெரிகிறது. மேலும், அந்த இரு சாவியை வைத்தே கதையை நகர்த்தியது கொஞ்சம் வீக்காக தோன்றுகிறது. ஆனால், எப்படி இருந்தாலும், தியேட்டருக்கு சென்று மிஷன் இம்பாசிபிள் பார்க்கும் ரசிகர்களுக்கு வேறலெவல் விஷுவல் ட்ரீட் மற்றும் படம் முடியும் வரை என்கேஜ்மென்ட் எண்டர்டெயின்மென்ட் என ஒரு பக்கா பேக்கேஜ் படமாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. மிஷன் இம்பாசிபிள் – பாக்ஸ் ஆபிஸ் பெரியம்மா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.