சோனேபர்க்,-ஜெர்மனியில், ஏ.எப்.டி., எனப்படும் ஜெர்மனிக்கு மாற்று என்ற தீவிர மதவாத கட்சி, சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்றுள்ளது.
நாஜி படை காலத்துக்குப் பின், மதவாத கட்சி பிரபலமடைந்து வருவது, அங்குள்ள மற்ற கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், சோனேபர்க் என்ற நகரத்தில் நடந்த தேர்தலில், ஏ.எப்.டி., கட்சி வென்றுள்ளது.
கடந்த 2013ல் துவக்கப்பட்ட இந்தக் கட்சி, புலம்பெயர்ந்து வந்துள்ள அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தக் கொள்கை, ஜெர்மனி மக்களிடையே பிரபலமானது. இதையடுத்து, இந்தக் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகத் துவங்கியது.
சமீபத்தில் சோனேபர்க் நகரத்தில் நடந்த தேர்தலில், இந்தக் கட்சி வென்றுள்ளது. அடுத்தாண்டு இறுதியில் பார்லிமென்டுக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்தக் கட்சிக்கு, 20 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
ஆளும் இடதுசாரி கூட்டணியில் உள்ள சி.டி.யு., எனப்படும் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சிக்கு, 28 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான இடதுசாரி கட்சியான எஸ்.பி.டி., எனப்படும் சமூக ஜனநாயகக் கட்சிக்கு, 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துஉள்ளனர்.
கடந்த சில மாதங்களில் நடந்த கருத்துக் கணிப்புகளில், மதவாத ஏ.எப்.டி., கட்சிக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லரின் தேசிய சமூகக் கட்சி, 1930களில் மிகவும் வலுவாக இருந்தது. அதற்கு பின், தற்போது மீண்டும் தீவிர மதவாத கட்சி அங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது, மற்ற கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்