லக்னோ: ஜல் ஜீவன் திட்ட நிறுவனங்களின் பங்களிப்புடன் உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கான்வென்ட்டுக்கு நிகராக மாற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. 2வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக செயல்பட்டு வருகிறார். அங்கு பள்ளி கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தான் பள்ளியின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக உத்தர பிரதேச மாநிலம் விந்தியா மற்றும் பண்டேல்கண்ட் பிராந்தியங்களில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளை கான்வென்ட் பள்ளிகளுக்கு நிகராக மாற்ற அந்த அரசு திட்டம் வகுத்துள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் உள்ள நிறுவனங்கள் பள்ளி மேம்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஜல் ஜீவன் திட்டம் என்பது கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை அடிப்படையாக கொண்டுள்ளது. இது மத்திய அரசின் திட்டமாகும். இதனை பல்வேறு நிறுவனங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் தான் உத்தர பிரதேசத்தில் பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளது.
அதன்படி உத்தர பிரதேச மாநில அடிப்படை கல்வி கவுன்சிலின் கீழ் 9 பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த பள்ளிகளில் புதிதாக அறிவியல் பாடம் மற்றும் கம்யூட்டர் பாடங்களை கற்பதற்கான லேப்கள் அமைக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள், மதிய உணவு அருந்தும் கூடம், கலாசாரம் கற்று கொள்வதற்கான ஏற்பாடுகளும், விளையாட்டு திடல்களும் அமைக்கப்பட உள்ளது. கழிவறை வசதி மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விந்தியா மற்றும் பண்டேல்கண்ட் பிராந்தியங்கள் தலா ஒரு பள்ளிகளில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த திட்டத்தின் மூலம் பள்ளி வகுப்பறைகளை புனரமைத்தல், நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் தொழில்நுட்பங்களை பொருத்துதல், தீத்தடுப்பு உள்ளிட்ட பிற பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்பட உள்ளது.

மேலும் நூலகம், கம்ப்யூட்டர், கணிதம், அறிவியல் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பாளர்கள், பணியாளர்கள அறை, காய்கறி தோட்டங்கள், சேமிப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது. மேலும் ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை குழந்தைகள் எளிதாகவும், விரைவாகவும் திறம்பட கற்கவும் சிறப்பு ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதுபற்றி நமாமி கங்கே மற்றும் ஊரக குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‛‛ஜல் ஜீவன் திட்டத்தில் பணி செய்யும் நிறுவனங்கள் கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்தவும், ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்கவும் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்த உள்ளன” என்றார்.
இந்த திட்டத்தின் கீழ் புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள சித்ரகூட், ஹமிர்பூர், மஹோபா, பண்டா, ஜான்சி, ஜலான், லலித்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 2 மாவட்டங்களில் விந்தியா பிராந்தியத்தில் மிர்சாபூர், சோன்பத்ரா மாவட்டங்களில் ரூ.12.87 கோடி செலவிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.